1947ல் பிரிந்த குடும்பம்: 74 ஆண்டுகளுக்குப் பின்.. கர்தார்பூரில் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் (விடியோ)

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 1947ஆம் ஆண்டு இந்திய பிரிவினையின்போது ஏற்பட்ட குழப்பத்தில் பிரிந்து சென்று, சுமார் 74 ஆண்டுகளுக்குப் பின் தற்போது இணைந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தேறியுள்ளது.
கர்தார்பூரில் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம்
கர்தார்பூரில் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம்


புது தில்லி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 1947ஆம் ஆண்டு இந்திய பிரிவினையின்போது ஏற்பட்ட குழப்பத்தில் பிரிந்து சென்று, சுமார் 74 ஆண்டுகளுக்குப் பின் தற்போது இணைந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தேறியுள்ளது.

பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப் வளாகத்தில், இந்த உணர்வுப்பூர்வ சந்திப்பு நடந்துள்ளது.

பஞ்சாபி செய்தி சேனலில் வெளியான தகவலை அடிப்படையாகக் கொண்டு, பிரிந்து சென்று இரண்டு குடும்பங்களும் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு, 74 ஆண்டுகளுக்குப் பின் இணைவதற்கு கர்தார்ப்பூர் வளாகம் நிலையான சாட்சியாக அமைந்திருந்தது.

நங்கனா மாவட்டத்திலிருந்து இதற்காக, ஷாஹித் ரஃபீக் மித்து, தனது 40 பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்களுடன் கர்தார்பூர் வந்திருந்தார். பஞ்சாப் மாநிலம் அமிருதசரசைச் சேர்ந்த ஷாஹ்பூர் தோக்ரானில் வசித்து வந்த சோனோ மிது, தனது 8 பேர் கொண்ட குடும்பத்துடன் அங்கு வந்திருந்தார்.

பிரிந்த போது பார்த்துக் கொண்ட முதல் தலைமுறை உறவினர்களுடன் தற்போது இரண்டாம் தலைமுறை உறவுகளும் என இரண்டு குடும்ப உறுப்பினர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து கட்டியணைத்து, உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் விட்டு அழுத காட்சி, பார்ப்போரின் கண்களையும் ஈரமாக்கியது.

1947 பிரிவினையின் போது, ஷாஹித் ரஃபீக் பாகிஸ்தானுக்கும், அவரது சகோதரர் இக்பால் பஞ்சாப்பிலும் தங்கிவிட்டனர்.  ஒரு செய்தி சேனலில் ஷாஹித் ரஃபீக், பிரிவினை காலம் குறித்த அனுபவங்களை நேர்காணலில் சொன்னதைப் பார்த்த அவரது சகோதரர்கள், பல்வேறு கட்ட முயற்சிகளின் நிறைவாக சந்தித்துக் கொண்டுள்ளனர்.

இரு குடும்பத்தினரும் தங்களது பழைய கதைகளை பரிமாறிக் கொள்ளவும், புதிய கதைகளை பேசி முடிக்கவும் இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com