யார் இந்த புதின்? அதிகாரத்தை தன்னை சுற்றி சுழல வைத்த முன்னாள் உளவாளி

கடந்த பல வாரங்களாக மேற்கத்திய நாடுகள் கணித்துவந்ததை ரஷிய அதிபர் இன்று காலை உண்மையாக்கினார். நிலம், வான், கடல் வழியாக அண்டை நாடான உக்ரைன் மீது படையெக்க உத்தரவிட்டுள்ளார்.
ரஷிய அதிபர் புதின்
ரஷிய அதிபர் புதின்

கடந்த பல வாரங்களாக மேற்கத்திய நாடுகள் கணித்துவந்ததை ரஷிய அதிபர் இன்று காலை உண்மையாக்கினார். நிலம், வான், கடல் வழியாக அண்டை நாடான உக்ரைன் மீது படையெக்க உத்தரவிட்டுள்ளார். இப்படி, உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்து போருக்கு காரணமான ரஷிய அதிபர் கடந்து வந்த பாதையை தெரிந்து கொள்வோம்.

கடந்த 1952ஆம் ஆண்டு, புனித பீட்டர்ஸ்பர்க் நகரில் பிறந்த விளாதிமிர் புதின், ரஷிய ரகசிய உளவு அமைப்பான கேஜிபியில் 1975ஆம் ஆண்டு சேர்ந்தார். 1990ஆம் ஆண்டு வரை, அதில் பணியாற்றினார். சோவியத் யூனியன் உடைந்த பிறகு, ரஷிய அரசில் சேர்ந்தார். 

பின்னர், ரஷியாவின் அதிபராக போரிஸ் யெல்ட்சின் பொறுப்பு வகித்த போது, அந்நாட்டின் பிரதமராக புதின் ஓராண்டு காலம் பொறுப்பு வகித்தார். இதையடுத்து, 2000ஆம் ஆண்டு, அவர் அதிபரானார். அப்போதிலிருந்து இப்போது வரை, 20 ஆண்டுகளுக்கு மேலாக அதிகார மையமாக திகழ்ந்துவருகிறார்.

ரஷியாவின் இயற்கை எரிவாயுவை சார்ந்தே ஐரோப்பிய நாடுகள் இருப்பதால், சர்வதேச அளவில் சக்திமிக்க தலைவராக புதின் உருவெடுத்தார். ஐரோப்பிய ஒன்றித்திற்கு அதிக அளவு இயற்கை எரிவாயுவை விநியோகிக்கும் நிறுவனமாக ரஷியாவின் காஸ்ப்ரோம் திகழ்கிறது,

ரஷிய அரசியலமைப்பின்படி, இரண்டு முறை மட்டுமே ஒருவர் அதிபராக பொறுப்பு விகிக்கலாம். இதன் காரணமாக, பிரதமராக பொறுப்பு வகித்த டிமிட்ரி மெட்வெடேவை அதிபராக்கிவிட்டு புதின் பிரதமரானார். கடந்த 2012ஆம் ஆண்டு, புதின் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிபராக பொறுப்பேற்ற இரண்டே ஆண்டுகளில், கிரிமியாவை ரஷியாவில் இணைத்துக் கொண்டார்.

இதற்கு நடுவே, 2013 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில், நான்கு முறை உலகின் சக்தி வாய்ந்த நபராக புதின் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்றார். ஆனால், இந்த தேர்தலில் புதின் தலையிட்டதாக 2017ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்கு, புதின், டிரம்ப் ஆகிய இருவரும் மறுப்பு தெரிவித்தனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு, மார்ச் மாதம், ரஷியாவின் அதிபராக புதின் நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், புதின் அரசியலமைப்பை மாற்றினார். அதிபராக பொறுப்பு வகிக்கும் காலம் முடிந்த பிறகும், அதிகாரம் தன்னிடம் இருக்கும் வகையில் திருத்தம் மேற்கொண்டார். 2024ஆம் ஆண்டு, அவரின் அதிபர் பதவிகாலம் முடிவடைகிறது. இதனை கருத்தில் கொண்டே, இந்த நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

'ரஷிய சாம்ராஜ்யத்தை' உருவாக்க புதின் முயல்வதாகவும் ரஷியாவின் ஓர் அங்கமாக உக்ரைனை இணைக்க புதின் விரும்புவதாக அமெரிக்காவின் மூத்த உளவு அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருந்தனர். முன்னதாக, 2021ஆம் ஆண்டு புதின் எழுதிய கட்டுரையில், ரஷியாவின் மகுடமே உக்ரைன் எனக் குறிப்பிட்டிருந்தார். 

கிரிமியாவை இணைத்து எட்டு ஆண்டுகளுக்கு பிறகு, உக்ரைனை தாக்க புதின் உத்தரவிட்டார். உக்ரைன் எல்லைக்குள் ரஷிய படைகள் நுழைந்த நிலையில், குண்டு மழை வீச தொடங்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com