
உக்ரைனில் போர்ச்சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், ரஷிய ராணுவ வாகனங்களிலுள்ள குறியீடுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷிய ராணுவ வாகனங்களில் 'இசட்' (Z) போன்ற எழுத்துக்களின் குறியீடுகள் அமைந்துள்ளன. ராணுவத்துக்குச் சொந்தமான கனரக லாரிகள், டாங்கிகள் என அனைத்து வாகனங்களிலும் இசட் என்ற ஆங்கில எழுத்து குறியீடு இடம்பெற்றுள்ளது. ரஷிய ராணுவ வீரர்கள் ஆக்கிரமித்துள்ள இடங்களுக்கு ஏற்ப இது மாறுபடுகிறது.
உக்ரைனில் கடந்த 24ஆம் தேதி காலை முதல் ரஷிய ராணுவ வீரர்கள் அனைத்து எல்லைகளிலும் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். நாட்டின் தலைநகரான கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களையும் ரஷிய ராணுவம் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
உக்ரைன் நாட்டிலிருந்து சுமார் 1.5 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமான உக்ரைன் வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் ராணுவத்தினரும், மக்களும் ஆயுதமேந்தி போரிட்டு வருகின்றனர். இதனால் ரஷிய ராணுவ வீரர்களும் போரில் உயிரிழந்தனர்.
இதனிடையே உக்ரைனில் வலம் வரும் ரஷிய ராணுவ வாகனங்கள் இசட் குறியீட்டுடன் காணப்படுகின்றன. ராணுவ வாகனங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரி இருப்பதால், உக்ரைன் ராணுவத்தினரின் வாகனங்களிடமிருந்து வேறுபட்டிருக்க இசட் குறியீடு பயன்படுத்தப்படுவதாக உக்ரைனிலுள்ள் ரஷிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், உக்ரைன் ராணுவ வாகனங்களின் மீது தாக்குதல் நடத்தும்போது குழப்பம் ஏற்படாமல் இருக்க உதவும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி உக்ரைனின் அனைத்து எல்லைகளிலும் ரஷிய ராணுவம் சூழ்ந்துள்ளதால், எந்தப் பகுதியில் இறக்கப்பட்டுள்ள ரஷிய வீரர்கள் என்பதை வேறுபடுத்திக்காட்டவும் வாகனங்களில் குறியீடுகள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.