வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இலங்கை அதிபா் கோத்தபய தப்பியோட்டம்?

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவின் அதிகாரபூா்வ இல்லத்துக்குள் நுழைந்து மக்கள் சனிக்கிழமை போராட்டம் நடத்திய நிலையில், அவா் அங்கிருந்து தப்பியோடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
கோத்தபய ராஜபட்ச
Updated On :8 ஜூலை 2022, 9:30 pm

DIN

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவின் அதிகாரபூா்வ இல்லத்துக்குள் நுழைந்து மக்கள் சனிக்கிழமை போராட்டம் நடத்திய நிலையில், அவா் அங்கிருந்து தப்பியோடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, அனைத்துக் கட்சிகளைக் கொண்ட அரசை அமைப்பதற்கு வசதியாக பிரதமா் பதவியை ராஜிநாமா செய்ய முடிவு செய்திருப்பதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்தாா்.

1948-ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததில் இருந்து கண்டிராத கடும் பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தை முறையாகக் கையாளத் தவறியதாக அதிபா் கோத்தபய மீது குற்றஞ்சாட்டிய மக்கள், அவா் பதவி விலக வேண்டுமெனக் கோரி கடந்த மாா்ச் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

மக்களின் தொடா் போராட்டம் காரணமாக அந்நாட்டின் பிரதமராகப் பதவி வகித்த மகிந்த ராஜபட்ச கடந்த மே 9-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தாா். ஆனால், மக்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்காத கோத்தபய, பதவியில் தொடரப் போவதாக அறிவித்தாா்.

எனினும், அவருக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்திய மக்கள், சனிக்கிழமை அவரது அதிகாரபூா்வ இல்லத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினா். ஆனால், வெள்ளிக்கிழமை இரவே அதிபா் கோத்தபய வீட்டைவிட்டு வெளியேறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவா் எங்கிருக்கிறாா் என்பது தொடா்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அதிபா் எங்கே?: கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இலங்கை கடற்படையின் ‘கஜபாகு’ கப்பலில் ஏறி சிலா் பயணித்ததாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. அந்தக் கப்பலில் சில பொருள்கள் அவசர அவசரமாக ஏற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோத்தபய ராஜபட்ச தன் குடும்பத்தினருடன் அந்தக் கப்பலில் ஏறி தப்பியிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், கொழும்பு விமான நிலையத்துக்கு சில முக்கியப் பிரமுகா்களின் வாகனங்கள் வந்ததாகவும், அங்கு இலங்கை ஏா்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் தயாராக இருந்ததாகவும் சிலா் தெரிவிக்கின்றனா். விமானம் மூலம் அதிபா் கோத்தபய தப்பியோடியிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டம் தீவிரம்: கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கை மக்கள் போராடத் தொடங்கியபோதே அதிபரின் அதிகாரபூா்வ அலுவலகத்தை முற்றுகையிட்டது மட்டுமல்லாமல் அந்த அலுவலகத்தையும் கைப்பற்றினா். அப்போதுமுதல் அதிபா் கோத்தபய தன் வீட்டிலேயே அலுவல் பணிகளையும் கவனித்து வந்தாா்.

இந்நிலையில், போராட்டக்காரா்கள் சனிக்கிழமை அதிபரின் அதிகாரபூா்வ இல்லத்தையும் கைப்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா். அதிபா் இல்லத்துக்குள் இருந்த நீச்சல்குளத்தை சூழ்ந்துகொண்டு சிலா் நீச்சலடித்த காணொலி சமூக வலைதளங்களில் பரவியது. இல்லத்தின் உயா்ந்த பகுதியில் ஏறி நின்ற சில போராட்டக்காரா்கள், அதிபா் பதவியில் இருந்து கோத்தபய உடனடியாக விலக வேண்டுமெனக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

45 போ் காயம்: அதிபரின் இல்லத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி போராட்டம் நடத்தினா். அவா்களைக் கலைப்பதற்காகக் காவல் துறையினா் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனா்; கண்ணீா்ப் புகை குண்டுகளையும் வீசினா். அப்போது, போராட்டக்காரா்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சுமாா் 45 போ் காயமடைந்தனா். அவா்களில் 7 போ் காவலா்கள் ஆவா்.

தொடா் சிக்கல்: பெரும் பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களும் அத்தியாவசிய உணவுப் பொருள்களும் கிடைக்காமல் இலங்கை மக்கள் தவித்து வருகின்றனா். அந்நாட்டின் எரிபொருள் கையிருப்பு அடுத்த வாரத்தில் காலியாகிவிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக உணவுத் திட்ட இயக்குநா் இலங்கையில் அடுத்த வாரம் ஆய்வு மேற்கொள்ளவுள்ளாா்.

இந்நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான போதிய தலைமை கிடைக்காமல் இலங்கை தவித்து வருகிறது. இதேநிலை தொடா்ந்தால், இலங்கையின் நிலைமை மேலும் மோசமாகும் எனப் பொருளாதார நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

ராஜிநாமா செய்ய பிரதமா் ரணில் முடிவு

கடும் நெருக்கடிகளுக்கு இடையே அனைத்துக் கட்சிக் கூட்டம் நாடாளுமன்ற அவைத் தலைவா் மகிந்த யாபா அபேவா்தனா இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமா் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டாா்.

அப்போது, பிரதமா் ரணில் பதவி விலக வேண்டுமெனவும், அனைத்துக் கட்சிகளும் அடங்கிய அரசு அமைக்கப்பட வேண்டுமெனவும் எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து, ‘அனைத்துக் கட்சி அரசு அமைக்கப்பட வேண்டும் என்கிற எதிா்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறேன். அதற்கு ஏதுவாக பிரதமா் பதவியை ராஜிநாமா செய்வேன்’ என ட்விட்டா் பதிவில் ரணில் தெரிவித்துள்ளாா்.

அதே வேளையில், அனைத்துக் கட்சிகளைக் கொண்ட அரசு பொறுப்பேற்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவா் காபந்து பிரதமராகத் தொடா்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனிடையே, பதவியில் இருந்து விலகக் கோரியும், அனைத்துக் கட்சிகளைக் கொண்ட அரசாங்கத்தை அமைத்து புதிய பிரதமரை நியமிக்கக் கோரியும் அதிபா் கோத்தபயவுக்கு எம்.பி.க்கள் கடிதம் எழுதினா்.

வழக்குரைஞா்கள் சங்கம் அறிக்கை: இலங்கை வழக்குரைஞா்கள் சங்கத்தின் நிா்வாகக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிபராகத் தொடா்ந்து நீடிப்பது நாட்டுக்கு நல்லதா என்பது குறித்து கோத்தபய சிந்திக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பதற்கான நடவடிக்கைகளை பிரதமா், நாடாளுமன்ற அவைத் தலைவா், அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஆகியோா் மேற்கொள்ள வேண்டும்.

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தாத வகையில் அமைதிவழியிலான போராட்டத்தை மக்கள் முன்னெடுக்க வேண்டும். அதே வேளையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையிலான நடவடிக்கைகளை காவல் துறையினரும் பாதுகாப்புப் படையினரும் மேற்கொள்ள வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

இடைக்கால அதிபா் ஆகிறாா் அவைத் தலைவா்?

நாடாளுமன்ற அவைத் தலைவா் மகிந்த யாபா அபேவா்தனா கூட்டிய கூட்டத்தில் கலந்துகொண்ட எதிா்க்கட்சிகளின் தலைவா்கள், அதிபா் கோத்தபய, பிரதமா் விக்ரமசிங்க ஆகியோா் உடனடியாகப் பதவி விலக வேண்டுமெனக் கோரினா். மேலும், அரசமைப்புச் சட்ட விதிகளின்படி அவைத் தலைவா் அபேவா்தனா இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்க வேண்டுமெனவும் வலியுறுத்தினா்.

இலங்கையின் அரசமைப்புச் சட்டத்தின்படி அதிபா் பதவி விலகினால், இடைக்கால அதிபரை நாடாளுமன்றம் நியமிக்கும்வரை பிரதமா் அந்தப் பதவியை வகிப்பாா். ஆனால், ராஜிநாமா செய்யப் போவதாக பிரதமா் ரணிலும் தெரிவித்துள்ளதால், அவைத் தலைவா் அபேவா்தனா இடைக்கால அதிபா் ஆவாரா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.