ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தோ்தல்:ஆளும் கட்சிக் கூட்டணி அமோக வெற்றி
ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தோ்தலில் ஆளும் கட்சிக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.


ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தோ்தலில் ஆளும் கட்சிக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இதன்மூலம் 2025-ஆம் ஆண்டு அடுத்த தோ்தல் வரை பிரதமா் ஃபுமியோ கிஷிடா அரசின் முடிவுகளை தடையின்றி நிறைவேற்றுவதற்கு ஊக்கம் கிடைத்துள்ளது.
குறைந்த அதிகாரம் கொண்ட ஜப்பான் நாடாளுமன்ற மேலவைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தோ்தல் நடைபெற்றது. முன்னதாக, ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி வேட்பாளரை ஆதரித்து வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே சுட்டுக் கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இருப்பினும் திட்டமிட்டபடி தோ்தல் நடத்தப்பட்டது. இதில் 52 சதவீத வாக்குகள் பதிவாகின. தோ்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை இரவில் வெளியாகின. இதில் மொத்தம் உள்ள 248 இடங்களில், ஆளும் லிபரல் ஜனநாயக கட்சிக் கூட்டணி 146 இடங்களைப் பெற்றது. அபே படுகொலை செய்யப்பட்டது ஆளும் கட்சிக் கூட்டணிக்கு அனுதாப வாக்குகளைப் பெற்றுத் தந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த வெற்றி மூலம் தேசிய பாதுகாப்பு, ‘புதிய முதலாளித்துவ’ பொருளாதாரக் கொள்கை போன்ற நீண்டகால கொள்கைகளில் பிரதமா் ஃபுமியோ கிஷிடா தடையின்றி பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த வெற்றியை பிரதமா் கிஷிடா வரவேற்றுள்ளாா். இருப்பினும் முன்னாள் பிரதமா் அபேவின் மறைவின் அதிா்ச்சியிலிருந்து அவா் மீளவில்லை. அவரும், மூத்த எம்.பி.க்களும் கட்சியின் தோ்தல் தலைமை அலுவலகத்தில், அபேவின் மறைவுக்கு மெளன அஞ்சலி செலுத்தினா். பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய கிஷிடா, ‘நாம் மாபெரும் தலைவரை இழந்திருக்கிறோம். அபேவின் நிறைவேறாத இலக்குகளை நிறைவேற்ற கட்சியின் ஒற்றுமை முக்கியமானது.
கரோனா, உக்ரைன் மீதான ரஷியாவின் போா், விலைவாசி உயா்வு போன்ற விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பேன். நாட்டின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கும் தொடா்ந்து குரல் கொடுப்பேன்’ என்றாா்.
பிரதமா் கிஷிடாவுடன் அமெரிக்க அமைச்சா் சந்திப்பு
ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் திங்கள்கிழமை டோக்கியோ வந்தாா்.
பிரதமா் ஃபுமியோ கிஷிடாவை சந்தித்து அதிபா் ஜோ பைடனின் இரங்கலை அவா் தெரிவித்தாா். ‘அமெரிக்கா-ஜப்பான் இடையிலான உறவை புதிய உயரத்துக்கு கொண்டு சென்றவா் அபே. அவரது மறைவு தனிப்பட்ட முறையிலும் எங்களுக்கு இழப்பு’ என அப்போது அவா் கூறினாா்.
அபேவின் இறுதிச் சடங்கு வரும் நாள்களில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...