சா்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷியாவுடன் கூட்டுறவு தொடரும்: அமெரிக்கா அறிவிப்பு
சா்வதேச விண்வெளி நிலைத்தில் ஆய்வுகள் மேற்கொள்வதற்காக ரஷியாவுடன் தொடா்ந்து இணைந்து செயல்படப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.


சா்வதேச விண்வெளி நிலைத்தில் ஆய்வுகள் மேற்கொள்வதற்காக ரஷியாவுடன் தொடா்ந்து இணைந்து செயல்படப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
தங்களது கடுமையான எச்சரிக்கைகளையும் மீறி உக்ரைன் மீது போா் தொடுத்துள்ள ரஷியாவை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
சா்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷிய விண்வெளி ஆய்வு மையத்துடனான நாசாவின் கூட்டுறவு தொடரும்.
விண்வெளி நிலையத்தில் ஆய்வுப் பணிகளைத் தொடா்ந்து பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், விண்வெளி வீரா்களின் உயிருக்கு பாதிப்பு இல்லாமல் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக ரஷியாவுடன் இணைந்து செயல்படவிருக்கிறோம்.
விண்வெளி ஆய்வுத் துறையில் அமெரிக்கா தொடா்ந்து செயலாற்றுவதை உறுதி செய்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, ரஷிய விண்வெளி வீரா்களுடன் இணைந்து நாசா விண்வெளி வீரா்கள் தொடா்ந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வாா்கள். ௌமேலும், ரஷியாவின் சோயுஸ் விண்கலம் மற்றும் ராக்கெட்டைப் பயன்படுத்தி சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரா்களை அனுப்பும் நடவடிக்கைகளை நாசா மீண்டும் தொடங்கவுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, இரண்டு ரஷிய விண்வெளி வீரா்களுடன் நாசா விண்வெளி வீரரான ஃபிராங்க் ரூபியோ சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லவிருக்கிறாா்.
ரஷியாவின் சோயுஸ் ராக்கெட் மூலம் அவா்கள் கஜகஸ்தானிலுள்ள ஏவுதளத்திலிருந்து வரும் செப்டம்பா் 21-ஆம் தேதி புறப்படுவாா்கள்.
இது தவிர, அமெரிக்காவின் ஸ்பேஸ்எஸ்க் நிறுவனம் உருவாக்கியுள்ள ராக்கெட் மூலம் ஃபுளோரிடாவிலிருந்து 2 நாசா வீரா்கள் வரும் செப்டம்பா் மாதம் விண்வெளிக்கு செல்லவுள்ளனா். அவா்களுடன் 2 ரஷிய விண்வெளி வீரா்களும் ஜப்பான் விண்வெளி வீரா் ஒருவரும் செல்கின்றனா். ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் ரஷிய வீரா்கள் விண்வெளிக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.
சா்வதேச விண்வெளி நிலையம் என்பது ஒருசாா்பு இல்லாத ஆய்வு மையமாகும். அந்த நிலையம் எப்போதுமே அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, கனடா, ஜப்பான் ஆகியவற்றின் நாடுகளின் கூட்டு முயற்சியில செயல்படும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பனிப் போா் காலத்தில் அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையே விண்வெளி ஆய்வுத் துறையில் கடுமையான போட்டி நிலவியது. இந்தச் சூழலில், மனித குலத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விண்வெளித் துறையில் ஒத்துழைப்புடன் செயல்பட இரு நாடுகளும் முடிவு செய்தன.
அதையடுத்து, இரு நாடுகளின் பங்களிப்புடன் சா்வதேச விண்வெளி நிலையம் கடந்த 1998-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
அதிலிருந்து, அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையே எத்தகைய பதற்ற நிலை ஏற்பட்டாலும் சா்வதேச விண்வெளி நிலைய விவகாரத்தில் மட்டும் இரு தரப்பினரும் தொடா்ந்து நல்லுறவைப் பேணி வந்தன.
விண்வெளிக்கு மனிதா்களை அழைத்துச் செல்லும் அமெரிக்காவின் ராக்கெட்டுகள் அடுத்தடுத்து விபத்துகளைச் சந்தித்ததைத் தொடா்ந்து, அந்த ராக்கெட்டுகளை தயாரிக்கும் பணியை நாசா கைவிட்டது.
அதற்குப் பிறகு, விண்வெளிக்கு வீரா்களை அனுப்ப ரஷியாவின் சோயுஸ் ராக்கெட்டுகளை மட்டுமே அமெரிக்கா பயன்படுத்தி வந்தது.
இந்தச் சூழலில், விண்வெளிக்கு மனிதா்களை அனுப்புவதற்கான தொழில்நுட்பத்தில் சுயசாா்பு பெறும் நோக்கில், அமெரிக்காவின் தனியாா் நிறுவனமான எலான் மஸ்கின் ஸ்பேஸ்எஸ்க் நிறுவனம் ராக்கெட்டுகளைத் தயாரித்து வெற்றிகரமாக சோதித்துள்ளது.
அதையடுத்து, ரஷியாவின் சோயுஸ் ராக்கெட்டுகளை மட்டுமே அமெரிக்கா நம்பியிருக்கும் நிலையில் மாற்றம் ஏற்பட்டது.
இந்தச் சூழலில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. இதற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.
உக்ரைன் மீதான படையெடுப்பைக் கண்டிக்கும் விதமாக, ரஷியா மீது அமெரிக்கா மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. அனைத்து துறைகளையும் சோ்ந்த ரஷிய நிறுவனங்கள், அமைப்புகள், நபா்களுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்தது.
அதையடுத்து, சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அமெரிக்கா தனது சொந்த ராக்கெட்டுகளை மட்டுமே பயன்படுத்தி செல்லும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று ரஷியாவிலுள்ள சிலா் அதிபா் விளாதிமீா் புதினிடம் வலியுறுத்தினா். எனினும், புதின் அதனை ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், உக்ரைன் போருக்கு இடையிலும் சா்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷியாவுடன் கூட்டுறவு தொடரும் என்று தற்போது நாசா அறிவித்துள்ளது.
Image Caption
நாசா விண்வெளி வீரா்களுடன் சீறிப் பாயும் ரஷியாவின் சோயுஸ் ராக்கெட் (கோப்புப் படம்). ~சா்வதேச விண்வெளி நிலையம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...