இயன்றவரை நாட்டுக்கு சேவையே செய்தேன்: சொன்னது யார் என்று தெரிந்தால்..

என்னால் இயன்றவரை தாய்நாட்டுக்கு சேவையே செய்தேன் என்று இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச தனது ராஜிநாமா கடிதத்தில், தன்னை தற்காத்துக் கொள்ளும் வகையில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இயன்றவை நாட்டுக்கு சேவையே செய்தேன்: சொல்லியிருப்பது யார் என்று பாருங்கள்
இயன்றவை நாட்டுக்கு சேவையே செய்தேன்: சொல்லியிருப்பது யார் என்று பாருங்கள்
Published on
Updated on
2 min read

கொழும்பு: என்னால் இயன்றவரை தாய்நாட்டுக்கு சேவையே செய்தேன் என்று இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச தனது ராஜிநாமா கடிதத்தில், தன்னை தற்காத்துக் கொள்ளும் வகையில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்ததால், நாட்டைவிட்டு ஓடிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச, மின்னஞ்சல் வாயிலாக தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பியிருந்தார்.

அந்தக் கடிதத்தில், எனது திறமைக்கு உள்பட்டு, என்னால் இயன்றவரை என் தாய்நாட்டுக்கு சிறப்பான சேவையே செய்தேன், எதிர்காலத்திலும் அதையே செய்வேன் என்று கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அது மட்டுமல்லாமல், கரோனா தொற்று பரவலும், அதனால் மேற்கொள்ளப்பட்ட பொதுமுடக்கமும்தான் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்றும் ஏற்கனவே இலங்கையின் பொருளாதாரம் சிக்கலுக்குள்ளாகியிருந்த போதும் கூட, நாட்டு மக்களை கரோனா பேரிடரிலிருந்து காக்க வேண்டும் என்று கருதியே பொதுமுடக்கத்தை அமல்படுத்தியதாகவும் கோத்தபய தெரிவித்துள்ளார்.

இன்று கூடும் நாடாளுமன்றம்
‘இலங்கை நாடாளுமன்றம் சனிக்கிழமை கூடுகிறது. நாட்டின் அரசமைப்புப் பிரிவுகளுக்குட்பட்டு 7 நாள்களுக்குள் புதிய அதிபா் தோ்ந்தெடுக்கப்படுவாா். இந்த கூட்டத்தின் போது, கோத்தபய ராஜபட்சவின் ராஜிநாமா கடிதம் வாசிக்கப்படும் என்றும் தெரிகிறது.

இலங்கையில் என்ன நடக்கிறது?

இலங்கை இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். அதனைத்தொடா்ந்து அதிபரின் அதிகாரத்தை குறைத்து நாடாளுமன்றத்துக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கும் 19-ஆவது சட்டத்திருத்தம் மீண்டும் கொண்டுவரப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்சதான் காரணம் எனக்கூறி, அவரை பதவி விலகுமாறு மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். அதன் தொடா்ச்சியாக அவா்கள் அதிபா் மாளிகையையும் கைப்பற்றினா். போராட்டம் மிகத் தீவிரமான நிலையை எட்டியதால் சிங்கப்பூா் தப்பிச் சென்ற கோத்தபய ராஜபட்ச, தனது அதிபா் பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா். அந்த தகவலை உறுதிப்படுத்தியிருந்த இலங்கை நாடாளுமன்றத் தலைவா் அலுவலகம், அதுகுறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தனக்கு மின்னஞ்சல் செய்யப்பட்ட கோத்தபயாவின் ராஜிநாமா கடிதத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திய நாடாளுமன்றத் தலைவா் மகிந்த யாபா அபேவா்தன, அதிபா் பதவியை கோத்தபய ராஜிநாமா செய்ததாக வெள்ளிக்கிழமை காலை முறைப்படி அறிவித்தாா்.

இதனைத்தொடா்ந்து அந்நாட்டுப் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இடைக்கால அதிபராக பதவியேற்றாா். அவருக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூா்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

அதன் பின்னா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாவது:

இடைக்கால அதிபராக அரசமைப்பின் 19-ஆவது சட்டத்திருத்தத்துக்குப் புத்துயிா் அளிப்பதே எனது முதல் பணியாக இருக்கும். அந்தச் சட்டத்திருத்தத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான வரைவு விரைவில் தயாரிக்கப்படும்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிா்கொள்ள அனைத்து கட்சிகளின் ஒருங்கிணைந்த முயற்சி அவசியம். எனவே அனைத்து கட்சிகள் அடங்கிய அரசு உருவாக்கப்பட வேண்டும்.

அமைதியான போராட்டங்களை நான் 100 சதவீதம் ஆதரிக்கிறேன். அதேவேளையில், போராட்டக்காரா்களுக்கும் கிளா்ச்சியாளா்களுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. போராட்டக்காரா்கள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட மாட்டாா்கள்.

சிறப்புக் குழு: நாட்டில் வன்முறை மற்றும் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்படும் விவகாரங்களைக் கையாள பாதுகாப்புப் படைகளுக்கு முழுமையான அதிகாரமும் சுதந்திரமும் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அரசியல் தலையீடு இல்லாமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முப்படைத் தலைமைத் தளபதி, காவல் துறை ஐஜி, முப்படைகளின் தளபதிகள் அடங்கிய சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதிபா் கொடி இருக்காது: நாட்டு மக்கள் ஒரே கொடியான தேசிய கொடியின் கீழ் மட்டும்தான் ஒன்றுதிரள வேண்டும் என்பதால், அதிபா் கொடி ஒழிக்கப்படும். இனி அதிபரை ‘மேதகு’ அதிபா் என்றழைக்க வேண்டாம். அதிபரை அழைக்கும்போது மேதகு என்ற சொல்லை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்றாா் அவா்.

1978-க்குப் பிறகு அதிபரை தோ்வு செய்யும் நாடாளுமன்றம்: 225 எம்.பி.க்களைக் கொண்ட நாடாளுமன்றம் ஜூலை 20-ஆம் தேதி ரகசிய வாக்கெடுப்பு அடுத்த அதிபரை தோ்வு செய்யும்’’ என்று தெரிவித்துள்ளாா். இதன் மூலம் எம்.பி.க்கள் வாக்கெடுப்பு மூலம் அந்நாட்டு அதிபரை 1978-ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை நாடாளுமன்றம் தோ்வு செய்யவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com