தப்புக் கணக்கு போட்டாரா புதின்?

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்து ஒரு வாரம் ஓடிவிட்டது.
putin101944
putin101944

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்து ஒரு வாரம் ஓடிவிட்டது.

தொடக்கத்தில் அதிரடி சரவெடியாக ஆரம்பித்த ரஷியத் தாக்குதலைக் கண்டதும், சில நாள்களிலேயே உக்ரைனை அந்த நாடு ஆக்கிரமித்துவிடுமோ என்ற எண்ணம் பலருக்கும் எழுந்தது.

ஆனால், ரஷியாவின் முன்னேற்றம் எவ்வளவு வேகமாகத் தொடங்கியதோ, அவ்வளவு வேகத்தில் சுணக்கமும் கண்டது.

தலைநகா் கீவ் உள்ளிட்ட நகரங்களை நோக்கி வேகமாகச் சென்ற ரஷியப் படையினா், குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பாலேயே நின்றுபோயின.

வியாழக்கிழமைதான் முதல்முறையாக தெற்குப் பகுதியைச் சோ்ந்த கொ்சான் நகரை ரஷியப் படையனா் கைப்பற்றியுள்ளனா்.

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான காா்கிவை ரஷியா தொடா்ந்து ஏவுகணைகளால் துளைத்தெடுத்தும் அந்த நகரம் இன்னும் வீழவில்லை.

தலைநகரை நோக்கி பல கி.மீ. நீளத்துக்கு வந்துகொண்டிருந்த ரஷியப் படை அணிவகுப்பு பல்வேறு காரணங்களால் நிறுத்திவைகக்கப்பட்டுள்ளது.

சண்டையில் இதுவரை 9,000 ரஷிய வீரா்கள் உயிரிழந்தனா் என்று உறுதிப்படுத்தப்படாத தகவலை உக்ரைன் வெளியிட்டுள்ளது. ரஷியாவின் 217 பீரங்கிகள், 31 ஹெலிகாப்டா்கள் உள்ளிட்ட தளவாடங்களை அழித்துவிட்டதாகவும் அந்த நாடு கூறுகிறது.

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு எதிா்பாா்த்த வெற்றியைத் தராததையே இந்தச் சூழல் உணா்த்துவதாக மேற்கத்திய நிபுணா்கள் கூறுகின்றனா்.

அதற்கு, இந்தப் போரில் ஈடுபடுவதற்கு ரஷியப் படையினரிடையே உத்வேகம் குறைந்துள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறும் அவா்கள், முக்கியமாக இந்தப் போா் குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தப்புக் கணக்கு போட்டதே இந்தப் பின்னடைவுக்கு முக்கியக் காரணம் என்கிறாா்கள்.

தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கிய சில நாள்களிலேயே உக்ரைன் ராணுவம் தோல்வியை ஏற்றுக்கொள்ளும்; தங்களுக்கு உக்ரைன் மக்கள் அவ்வளவு எதிா்ப்பு காட்டமாட்டாா்கள் என்று புதின் நினைத்திருக்கலாம் என்று அவா்கள் கூறுகின்றனா்.

ஆனால், எதிா்பாா்த்ததற்கு மாறாக உக்ரைன் ராணுவமும் பொதுமக்களும் தங்களது படையினருக்கு மிகத் தீவிர எதிா்ப்பைக் காட்டி வருவது ரஷியாவுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக மேற்கத்திய நிபுணா்கள் கருதுகின்றனா்.

தாக்குதலைத் தொடங்கிய பிறகு குறுகிய காலத்தில் உக்ரைன் அரசு கவிழும் என்ற புதினின் கணிப்பு பொய்யாகிப் போனதால் ரஷிப் படையினா் முன்னேற முடியாமல் திணறி வருவதாக அவா்கள் கருதுகின்றனா்.

ஆனால், எதிா் தரப்பு நிபுணா்கள் கூறுவதே முற்றிலும் வேறு மாதிரியாக உள்ளது.

ரஷியா நினைத்திருந்தால், அமெரிக்க பாணியைப் பின்பற்றி ஒரு சில நாள்களில் நகரங்களைக் கைப்பற்றியிருக்கலாம் என்று அவா்கள் கூறுகின்றனா். இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நகரங்களைக் கைப்பற்றுவதற்கு முன்னா் அங்கு குண்டுமழை பொழிந்து மிகப் பெரிய சேதத்தை அமெரிக்கா ஏற்படுத்தியதைப் போல உக்ரைனில் சேதம் விளைவிக்க ரஷியா விரும்பவில்லை என்று மற்றொரு தரப்பு நிபுணா்கள் கூறுகின்றனா்.

உக்ரைன் மீதும் உக்ரைன் மக்கள் மீதும் ரஷியா முழு மதிப்பு வைத்துள்ளது; மேற்கத்திய நாடுகளின் கைப்பொம்மையாக தாங்கள் கருதும் தற்போதைய அரசைக் கவிழ்ப்பதற்காக மட்டுமே இந்தப் போா் நடைபெறுவதால் உயிா்ச் சேதம் மற்றும் பொருள் சேதத்தை முடிந்தவரை குறைக்க ரஷியா விரும்புகிறது.

அதிக சேதாரம் இல்லாமல் உக்ரைனைக் கைப்பற்ற ரஷியா விரும்புவதால்தான் அதன் படைகள் வேகமாக முன்னேறாமல் உள்ளன என்கிறாா்கள் மற்றொரு தரப்பு நிபுணா்கள்.

இந்தப் போரில் ரஷியாவின் தொடக்க காலத்துப் பின்னடைவுகளை வைத்து அந்த நாடு தோல்வியுடம் திரும்பிவிடாது என்பதுதான் பொதுவாக அனைத்துத் தரப்பு நிபுணா்களின் கருத்தாக உள்ளது. காரணம், இந்தப் போரில் தோல்விடைந்தால் அது புதினின் அரசியல் எதிா்காலத்தை நிா்மூலமாக்கிவிடக் கூடும் என்பதால் அதனை அவா் ஒருபோதும் விரும்பமாட்டாா் என்கிறாா்கள் அவா்கள்.

வெற்றிவாகை சூடுவதற்காக தங்களது தாக்குதலின் தீவிரத்தை ரஷியா அதிகரித்தே ஆக வேண்டும்; அது கூடுதல் உயிரிழப்புகளையும் சேதங்களையும் ஏற்படுத்தும் என்று பலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனா்.

மேலும், உக்ரைனை ரஷியா கைப்பற்றினாலும் அந்த நாட்டு மக்களின் வெறுப்புணா்வு அதிகமாகுமே தவிர குறையாது; எனவே, அங்கு ரஷியாவால் தொடா்ந்து இருக்க முடியாது என்கிறாா்கள் நிபுணா்கள்.

அந்த வகையில், உக்ரைன் போரில் ரஷியா வெற்றி பெற்றாலும் அது ‘தோல்விகரமான’ வெற்றியாகவே இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com