உக்ரைனை ரஷியா தாக்குவதன் உள்(ள)நோக்கம் என்ன? அலசல் ரிப்போர்ட்!

ஆப்கன் போர் நடந்துமுடிந்து அதன் சுவடுகள்கூட மறையாத நிலையில், இந்த பூமி மற்றுமொரு பெரும் போரைச் சந்தித்திருக்கிறது. உக்ரைன் மீது ரஷியா ஆக்ரோஷ தாக்குதலை நடத்திவருகிறது. 
உக்ரைனை ரஷியா தாக்குவதன் உள்(ள)நோக்கம் என்ன? அலசல் ரிப்போர்ட்!

ஆப்கன் சண்டை நடந்துமுடிந்து அதன் சுவடுகள்கூட மறையாத நிலையில், இந்த பூமி மற்றுமொரு பெரும் போரைச் சந்தித்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக ரஷியா - உக்ரைன் இடையே போர்ப் பதற்றம் நிலவி வந்த சூழ்நிலையில், தன்னைவிட சிறிய, வலிமை குறைந்த நாடான உக்ரைன் மீது ரஷியா போர்த் தாக்குதல் நடத்தி வருகிறது. 

உக்ரைன் மீது போர் தொடுக்க கடந்த பிப். 24 ஆம் தேதி ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டார். தயாராக இருந்த ரஷியப் படைகள் முதலில் எல்லையைத் தாக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் நேரடியாக தலைநகர் கீவ்-யை நோக்கி படையெடுத்தன. இரண்டாவது நாளே கீவ் நகரை நெருங்கிய ரஷியப் படைகள் அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தின. 

ரஷியப் படைகள் எளிதாக கீவ் பகுதிக்குள் நுழைய முடியாத என்று எண்ணியிருந்த போதுதான் பெலாரஸ் ரஷியாவிற்கு உதவியுள்ளது. 

வரைபடத்தில் ரஷிய எல்லைக்கு அருகில் இருப்பது கார்கிவ் நகரம்தான். கீவ் உக்ரைனின் மத்தியில் அமைந்துள்ளது. ஆனால், பெலாரஸ் வழியாக கீவை எளிதில் அடைய முடியும். அவ்வாறே ரஷியப் படைகள் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. உக்ரைன் மீதான 6- ஆம் நாள் தாக்குதலில் ரஷியப் படைகளுக்கு ஆதரவாக பெலாரஸ் படைகளும் களமிறங்கியதே இதற்குச் சான்று. 

பெலாரஸ் மட்டுமின்றி ஏற்கெனவே தனிக் குடியரசாக அறிவிக்கப்பட்ட உக்ரைனின் டொடன்ஸ்க், லுஹான்ஸ்க் உதவியுடனும்தான் ரஷியா உக்ரைனுக்குள் உள்நுழைந்துள்ளது. 

ரஷியப்படை, தலைநகர் கீவ்-யைத் தொடர்ந்து உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள்ளும் நுழைந்தது. பெரும் பரப்பைக் கொண்ட கெர்சன் நகருக்குள்ளும் ஆக்ரோஷமான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது ரஷியா. கெர்சன் பகுதியில்தான் கப்பல் காட்டும்தொழிற்சாலைகள், துறைமுகங்கள் என முக்கியப் பகுதிகள் உள்ளன. ஒடேசா துறைமுகத்தைக் கைப்பற்றும் முனைப்பில் ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு வாரத்திற்குள்ளாக முக்கிய நகரங்களை ரஷியா கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தப் போரில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகம் நிகழ்ந்துகொண்டு இருக்கின்றன.

உக்ரைன் நாடு

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உக்ரைன் நாடு, போலந்தின் ஒரு பகுதியாகவும் ரஷியாவின் ஒரு பகுதியாகவும் இருந்தது. பின்னர் 1917ல் ரஷியப் புரட்சியை அடுத்து, 1922ல் உருவானது சோவியத் யூனியன். இதில் 15 நாடுகளில் உக்ரைனும் ஒன்று. ரஷியாவுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த நாடாக உக்ரைன் இருந்தது. ஏனெனில், உக்ரைன் இயற்கை வளங்கள் நிறைந்த பகுதி. சோவியத் யூனியனில் இருந்த முக்கியப் புள்ளிகள் பலரும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

இவை அனைத்துக்கும் மேலாக அணு ஆயுதம் தயாரிப்பில் உக்ரைன் முக்கியப் பங்கு வகித்தது. ரஷியாவின் மூன்றில் ஒரு பகுதி அணு ஆயுதத் தயாரிப்பு கிடங்கு உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே சோவியத் யூனியனில் உக்ரைனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 

இப்போதும் உக்ரைனில் இருக்கும் செர்னோபில் அணு உலைதான் உக்ரைனின் முக்கியமான சொத்து எனலாம். அதனையும் தற்போது ரஷியா கைப்பற்றியுள்ளது. 

பனிப்போருக்குப் பின் 1991ல் சோவியத் யூனியன் உடைந்தபோது, ஆர்மீனியா, அஸர்பைஜான், பெலாரஸ், எஸ்தோனியா, ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லாட்வியா, லிதுவேனியா, மால்டோவா, ரஷியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உக்ரைன் மற்றும் உஸ்பெகிஸ்தான் என அதிலிருந்த 15 நாடுகள் தனித்தனியாகப் பிரிந்தன. இதில் பெரும்பாலான நாடுகள் தங்களை சுதந்திர நாடுகளாக அறிவித்துக்கொண்டன. 

அப்போது உக்ரைனும்  சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. இப்போதும் ஐரோப்பாவில் பரப்பளவில் ரஷியாவுக்கு அடுத்த இரண்டாவது பெரிய நாடாக உக்ரைன் இருக்கிறது. 

அதுபோன்று, 1991ல் அமெரிக்கா, ரஷியாவுக்கு அடுத்தபடியாக அணு ஆயுதங்கள் அதிகம் கொண்ட நாடாகவும் உக்ரைன் இருந்துள்ளது. அதாவது, சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நேரத்தில், உக்ரைன் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடாக இருந்தது. அந்த நேரத்தில் அணு ஆயுதங்களைக் கைவிட அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் பிற நாடுகளை வலியுறுத்தி வந்த நிலையில் உக்ரைனிடமும் அதுகுறித்துப் பேசப்பட்டது. 

1994ல் ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்ட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 'ஆயுத பரவல் தடைச் சட்ட'த்தின்படி, அணு ஆயுதக் கிடங்கை அகற்றவும் அணு ஆயுதங்களை ரஷியாவிடம் ஒப்படைக்கவும் உக்ரைன்  ஒப்புக்கொண்டது. மாறாக, அணு ஆயுதங்களை அகற்றுவதன் மூலம் ஏற்படும் இழப்பை ரஷியா- அமெரிக்கா சரிசெய்யவும், உக்ரைனுக்கு பாதுகாப்பு வழங்கவும் அதில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. அதன்படியே உக்ரைன் 1996ல் அணு ஆயுதங்களை ரஷியாவும் ஒப்படைத்தது. 

அன்று அணு ஆயுதங்களை உக்ரைன், ரஷியாவிடம் கொடுத்திருக்கவிட்டால் இன்று ரஷியா, உக்ரைன் மீது போர் தொடுக்க யோசித்திருக்கலாம். 

நேட்டோ 

இரண்டாம் உலகப் போருக்குப் பின் சோவியத் யூனியனின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேட்டோ (NATO- North Atlantic Treaty Organisation) அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கு எதிராக சோவியத் யூனியன், 'வார்சா ஒப்பந்தம்' மூலமாக தனது ராணுவக் கூட்டணியை உருவாக்கியது. 

பின்னர், சோவியத் யூனியன் கலைக்கப்பட்டபோது, வார்சா ஒப்பந்தமும் கைவிடப்பட்டது. மாறாக, சோவியத் யூனியனிலிருந்த லாட்வியா, லிதுவேனியா, எஸ்தோனியா ஆகிய 3 நாடுகள் மட்டும் நேட்டோவில் இணைந்தன. மேலும், சோவியத் யூனியன் ராணுவக் கூட்டணியில் இருந்த போலந்து, ஹங்கேரி, பல்கேரியா ஆகிய நாடுகளும் தற்போது நேட்டோவில் உள்ளன. 

1949ல் நேட்டோ ஆரம்பிக்கப்பட்டபோது அதில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் இருந்தன. தற்போது 30 நாடுகள் இதன் உறுப்பினர்களாக உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒரு நாடு தாக்குதலுக்கு உள்ளாகும்பட்சத்தில் பிற நேட்டோ நாடுகள், தங்கள் ஆதரவை வழங்குகின்றன. சிறிய நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வது என்ற கோணத்தில் உருவாக்கப்பட்டதுதான் நேட்டோ. ஆனால், ரஷியா உள்ளிட்ட பெரிய நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க அமெரிக்கா மேற்கொண்ட ஓர் எளிய வழி இது. பெல்ஜியம் ப்ரூசல்ஸில் நேட்டோவின் தலைமையகம் உள்ளது. 

இப்போது, நேட்டோவுடன் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்து அதற்கான முயற்சி செய்து வந்த நிலையில்தான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது. 

உக்ரைன் அதிபர் காரணமா? 

உக்ரைனின் மேற்குப் பகுதியில் உக்ரேனியர்களும் கிழக்குப் பகுதியில் ரஷிய ஆதரவு மக்களும் இருந்தனர். கிழக்குப் பகுதியில் ரஷியர்கள் அதிமுகள்ள டோனட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பிராந்தியங்கள் 2014ல் குடியரசுகளாக அறிவிக்கப்பட்டன. ரஷியா அந்த பகுதி மக்களிடையே கிளர்ச்சியை ஏற்படுத்தி இதைச் செய்ததாக கூறப்பட்டது. ஆனால், பின்னர் ரஷியா இதனை மறுத்தது. 

அதுபோல, 2014ல் ரஷியர்கள் அதிகமுள்ள கிரிமியா பகுதியையும் கிளர்ச்சியின் பேரில் ரஷியா தன் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. ஆனால், பிற நாடுகள் இன்னும் இதனை அங்கீகரிக்கவில்லை. 

உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொடன்ஸ்க், லுஹான்ஸ் பிராந்தியங்கள் தனிக் குடியரசாக அறிவிக்கப்பட்டதற்குக் காரணம் 2014 -15ல் போடப்பட்ட 'மின்ஸ்க்' ஒப்பந்தங்கள். 

நேட்டோவில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தபோது அதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்தது. ஏனெனில் கிழக்கு உக்ரைனில் ரஷியர்கள் அதிகம் இருந்தனர். இதையடுத்தே,  உக்ரைனில் டோனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும், இந்த பகுதிகளுக்கு தங்களின் அனுமதியுடன் தேர்தல் நடத்த வேண்டும் என ரஷியா கூறியதன்பேரில் ஒப்பந்தத்தின்படி உக்ரைனும் ஒப்புக் கொண்டது. இவை உக்ரைனின் பகுதிகளாக இருந்தாலும் ரஷியாவின் ஆதரவாகவே பார்க்கப்பட்டன. அதுபோல, உக்ரைனை நேட்டோவில் இணைப்பதை ரஷியா ஒப்புக்கொள்ளவில்லை. 

சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் தனிநாடாக பிரிந்த பிறகு, உக்ரைனின் அதிபர்களாக இருந்தவர்கள் ரஷியாவின் கொள்கைகளுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்தவர்களே. இந்த சூழ்நிலையில்தான் 2019ல் உக்ரைன் அதிபர் ஆனார் வொலோதிமீா்  ஸெலென்ஸ்கி. இவர்களது பெற்றோர்கள் யூதர் இனத்தைச்  சேர்ந்தவர்கள். 

ஸெலென்ஸ்கி அதிபர் ஆனவுடன் உக்ரைனை நேட்டோவில் இணைக்க முயற்சித்து வந்தார். மேலும், முன்னதாக ரஷியாவுடன் போடப்பட்ட 'மின்ஸ்க்' ஒப்பந்தங்களை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. டோனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகள் சுதந்திரமாக இயங்கும் என்று அறிவித்தார்.அதிபரின் இந்த நடவடிக்கைகள்தான் புதினை கோபமடையச் செய்தது. 

இதனால் ரஷியா, நேட்டோவில் சேரக்கூடாது என உக்ரைனுக்கும், உக்ரைனை சேர்க்கக்கூடாது என்று அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை விடுத்தது. 1997க்கு பிறகு நேட்டோவில் சேர்ந்த நாடுகளை அமைப்பில் இருந்து விலக்க வேண்டும் என்றும் அமெரிக்காவிடம் ரஷியா கூறியது. இதன் காரணமாகவே நேட்டோவில் உக்ரைனை சேர்க்க அமெரிக்கா தயக்கம் காட்டி வந்தது. 

உக்ரைன் மக்களின் ஒரு பகுதியினர் ஐரோப்பிய யூனியனுடன் சேர விருப்பம் தெரிவிக்கின்றனர். ஆனால், ரஷியாவுக்கு இது பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கிறது. 

உக்ரைன் நேட்டோவில் இணையும் பட்சத்தில் ரஷிய எல்லையை நேட்டோ படைகள் சுற்றிவளைக்க வாய்ப்புள்ளது. ரஷியாவின் வணிகப் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படலாம்.

மனிதாபிமான அடிப்படையில் ரஷியா, உக்ரைன் மீது போர் தொடுத்தது தவறு என்றாலும், ரஷியாவின் அனைத்துவித பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று எண்ணியே ரஷியா, உக்ரைன் மீது தாக்குதலை எடுத்த முடிவெடுத்திருக்க வேண்டும். 

ஆப்கன் போர் தோல்வியினால் அமெரிக்கா சற்று தொய்வடைந்த நிலையில் இது சரியான தருணம் என்று நினைத்து புதின் இந்த முடிவை எடுத்திருக்கிறார். 

ஒருபக்கம், தன்னை அமைப்பில் இணைத்துக்கொள்வதாகக் கூறிய நேட்டோ படைகள், தங்களுக்கு உதவும் என்ற எண்ணத்தில் உக்ரைன் இந்த போரை எதிர்கொண்டிருக்கும். விளைவு? உக்ரைன் நாடு சிதறடிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. உக்ரைனை முழுவதுமாக ரஷியா கைப்பற்ற வாய்ப்பு அதிகம் உள்ளது. 

ஒருவேளை உக்ரைனை முழுவதுமாக ரஷியா கைப்பற்றினாலும் எதிர்காலத்தில் உக்ரைன் மக்கள் கிளர்ச்சியால் ரஷியாவிடம் இருந்து உக்ரைன் விடுபடவும் வாய்ப்புள்ளது. 

மூன்றாம் உலகப் போர் உருவாகுமா? 

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், 'மூன்றாம் உலகப் போர்' மிகுந்த அழிவை ஏற்படுத்தும் என்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் உத்தரவின்பேரில் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துவதாகவும் லாவ்ரோவ் குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைன் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுப்பதே இந்தப் படையெடுப்பின் நோக்கம் என்றும் எச்சரித்தார். 

தற்போது ரஷியா - உக்ரைன் இடையே மட்டுமே போர் நடந்து வருகிறது. அமெரிக்கா, உக்ரைனுக்கு நிதியுதவி, ராணுவ உதவியை மட்டுமே வழங்கி வருகிறது. படைகளை அனுப்பத் தயாராக இல்லை. அவ்வாறு ஒருவேளை நேட்டோ படைகள் உக்ரைனுக்கு ஆதரவாக இறங்கினால் இது உலகப்போராக மாற வாய்ப்புள்ளது. ஆனால், உலக அமைதி கருதி அமெரிக்கா இதனைச் செய்ய முற்படாது. ஆனால், உக்ரைனுக்கு பிற நாடுகள் அனைத்து வகையான உதவிகளையும் வழங்க வாய்ப்புள்ளது. எனினும், போர்க்களத்தில் உக்ரைன் தனித்துதான் விடப்பட்டிருக்கிறது. இதனை அதிபர் ஸெலென்ஸ்கி முன்கூட்டியே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. 

மற்றொரு பக்கம், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகளும் ரஷியா மீது முழுமையாக பொருளாதாரத் தடைகளை விதிக்கவில்லை. பகுதியாகவே தடைகளை விதித்து வருகின்றன. ஏனெனில் வணிக, பொருளாதார ரீதியாக ரஷியாவை சார்ந்து பல நாடுகள் உள்ளன. உதாரணமாக கச்சா எண்ணெய் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு ரஷியா. கச்சா எண்ணெய் விலை 100 டாலரை எட்டியுள்ளதற்கு காரணம் உக்ரைன் போரே. 

உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக ரஷியா மீது பொருளாதாரத் தடை விதிக்கும்பட்சத்தில் ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தலாம். ஆனால், இந்த இரண்டுக்குமே இப்போது வாய்ப்பு குறைவு என்பதால் மூன்றாம் உலகப் போர் உருவாக வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.

எனினும், போர்ச் சூழலில் எதையும் கணிக்க முடியாது, புதினின் நடவடிக்கைகளும் கணிக்க முடியாதவை என்பதால் எதையும் சந்திக்க உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும். 

இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? 

இந்தியாவைப் பொருத்தவரை அமெரிக்கா, ரஷியா ஆகிய இரு நாடுகளிலும் சமமாக நட்பு பாராட்டி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளதால் இந்தியா உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்தால் ரஷியாவிடம் பகையை ஏற்படுத்தும். தன் நாட்டு பாதுகாப்பு கருதியே ஐ. நா. தீர்மானத்தில் வாக்களிக்கவில்லை என்று இந்தியா கூறியுள்ளது. அந்தவகையில், ரஷியா - உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலையைத்தான் கையாண்டிருக்கிறது.

உக்ரைனில் 20,000 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. அண்டை நாடுகளான போலந்து, ஹங்கேரி நாடுகளிடம் நட்புறவு கொண்டிருப்பதால் இந்தியர்களை மீட்க அந்த நாடுகள் உதவி வருகின்றன. உக்ரைனுக்கு எதிராகவோ ரஷியாவுக்கு எதிராகவோ இந்தியா இருக்கும்பட்சத்தில் இந்தியர்களின் நிலை கேள்விக்குறி ஆகிவிடும். ரஷியாவிடம் இருந்து இந்தியா ஏவுகணைகளை வாங்கிவருவது குறிப்பிடத்தக்கது. 

அடுத்ததாக உக்ரைன் போரால் இந்தியாவிற்கு பொருளாதார ரீதியாக பாதிப்புகள் இருக்குமா என்றால் கண்டிப்பாக இருக்கும். கச்சா எண்ணெய் விலை உயர்வே இதற்கு ஒரு பெரிய உதாரணம். 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை எட்டியுள்ளது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலையுடன் அதிக போக்குவரத்து செலவினால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரலாம். இதனால் இந்திய பொருளாதாரத்திலும் பாதிப்பு ஏற்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com