இந்தியர்களை வெளியேற்ற தயார்...ஐநாவில் முக்கிய தகவலை பகிர்ந்த ரஷியா

உக்ரைனிலிருந்து வெளிநாட்டவர்களை அமைதியான வழியில் வெளியேற்றுவதை உறுதி செய்ய ரஷிய ராணுவம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது என ரஷிய தூதர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கிழக்கு உக்ரைனியே நகரங்களான கார்கிவ் மற்றும் சுமிக்கு அழைத்து சென்று இந்திய மாணவர்களையும் வெளிநாட்டவர்களையும் அங்கிருந்து வெளியேற்றுவதற்காக எல்லையில் ரஷிய பேருந்துகள் தயாராக இருப்பதாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷிய தகவல் தெரிவித்துள்ளது. 

ஐரோப்பிய கண்டத்தின் மிகப் பெரிய அணு உலை உக்ரைனின் ஜபோரிஜ்ஜியாவில் அமைந்துள்ளது. இதன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, அவசர கூட்டம் நடத்த வேண்டும் என அல்பேனியா, பிரான்ஸ், அயர்லாந்து, நார்வே, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது. இதன் பேரில், 15 உறுப்பினர்கள் கொண்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் பேசிய ஐநாவுக்கு ரஷியாவின் நிரந்தர பிரதிநிதி வாசிலி நெபென்சியா, "உக்ரைனில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினரை அமைதியான முறையில் வெளியேற்றுவதை உறுதி செய்ய ரஷிய ராணுவம் அனைத்தையும் செய்து வருகிறது. கார்கிவ் மற்றும் சுமி நகரங்களில் உக்ரைன் தேசியவாதிகள் 3,700 இந்திய குடிமக்களை பலவந்தமாக பிடித்து வைத்துள்ளனர். 

பயங்கரவாதிகள் பொதுமக்களை நகரங்களை விட்டு வெளியேற விடுவதில்லை. இது உக்ரேனியர்களை மட்டுமல்ல. வெளிநாட்டினரையும் பாதிக்கிறது. உக்ரைன் பிரஜைகள் பலவந்தமாக வைத்திருக்கும் வெளிநாட்டு குடிமக்களின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கிறது. கார்கிவில் 3,189 இந்தியர்கள், 2,700 வியட்நாம் நாட்டினர், 202 சீன நாட்டினர். சுமியில் 576 இந்திய நாட்டவர்கள், 101 கானா நாட்டவர்கள், 121 சீன நாட்டவர்கள் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.

ரஷியாவின் பெல்கோரோட் பகுதியில், இந்திய மாணவர்களையும் பிற வெளிநாட்டினரையும் வெளியேற்றி கார்கிவ் மற்றும் சுமிக்கு அழைத்து செல்வதற்காக நெகோதீவ்கா, சுட்ஜா ஆகிய இடங்களில் இன்று காலை 6:00 மணி முதல் 130 வசதியான பேருந்துகள் தயாராக உள்ளன. 

தற்காலிக தங்குவதற்காகவும், ஓய்வெடுப்பதற்காகவும் சூடான உணவு ஆகியவற்றை வழங்குவதற்கும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மருந்துகளின் இருப்புடன் நடமாடும் மருத்துவ நிலையங்களும் உள்ளன. வெளியேற்றப்பட்ட அனைவரும் பின்னர் பெல்கோரோடுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கிருந்து விமானம் மூலம் தங்கள் தாய்நாட்டிற்கு கொண்டு செல்லப்படுவார்கள்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com