வெப்பக்கோளமாக மாறிய பூமி: நாசா வெளியிட்ட செம ஹாட்டான தகவல்

இந்தியாவில், கோடை வெயில் குறித்தோ வானிலை குறித்தோ எடுத்துச் சொல்ல எந்த வானிலை நிபுணரும் தேவையில்லை.
வெப்பக்கோளமாக மாறிய பூமி: நாசா வெளியிட்ட செம ஹாட்டான தகவல்
வெப்பக்கோளமாக மாறிய பூமி: நாசா வெளியிட்ட செம ஹாட்டான தகவல்
Published on
Updated on
1 min read


புது தில்லி: இந்தியாவில், கோடை வெயில் குறித்தோ வானிலை குறித்தோ எடுத்துச் சொல்ல எந்த வானிலை நிபுணரும் தேவையில்லை.

நாம் கடந்து வந்த மார்ச் மாதம் வழக்கமானதைப் போல இல்லாமல், வெப்பமாக இருந்ததும், இதுவரை நாம் காணாத கடும் வெப்பம் தகிக்கும் ஏப்ரலாக மாறியதும், தற்போது கடந்து கொண்டிருக்கும் மே மாதம் வெளியே தலைகாட்ட முடியாமல் தவிப்பதும், சூரியக்கதிர்கள் நமது சருமத்தை ஊசியைப் போல அல்லாமல் கடப்பாரையைப் போல தாக்குவதும் 99 சதவீத இந்தியர்கள் உணர்ந்தே இருப்பார்கள். 

சரி இதெல்லாம் நாம் அனுபவப்பூர்வமாக அனுபவித்தது. ஆனால் இதற்கெல்லாம் ஒரு தரவுகள் வேண்டாமா? வேண்டும்தான். யார் தருவார்கள். இருக்கிறதே நாசா. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் இந்த தரவுகள், ய்ப்பா என்னமா கொளுத்துது வெயில் என்று நாம் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துச் சொன்ன வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் ஆதாரத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.

தரவுகளைப் பார்க்கலாம்..
நாசாவின் செயற்கைக்கோள் எடுத்த ஓராண்டின் புள்ளிவிவரங்கள்,  பூமி கணிக்கமுடியாத அளவில் வெப்பமடைந்து வருகிறது.

புவி வெப்பமயமாதல் என்ற செயல், கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாகவும், தற்போது மிக மோசமான அளவில் இருப்பதாகவும் கூறுகிறது.

2021ஆம் ஆண்டு மார்ச் முதல் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான ஓராண்டுக் காலத்தில், செயற்கைக்கோள் தரவுகளின்படி, நாசா கண்டுபிடித்திருப்பது என்னவென்றால், பூமியின் ஒட்டுமொத்த அமைப்பிலும், கூடுதலாக பல ஆற்றல்கள் சூழ்ந்துகொண்டிருப்பது உணரப்பட்டுள்ளது. கடல் வெப்பமயமாதல், நிலம் அதிக உஷ்ணத்தை உருவாக்குதல், சுற்றுச்சூழல் வெப்பமடைவது, பனிப்பாறைகள் உருகுதல், கடல்நீர் மட்டம் அதிகரிப்பது போன்றவை அதிகரித்துள்ளன.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பூமி, கணிக்க முடியாத வேகத்தில் அதாவது ஒரு சதுர மீட்டருக்கு 1.64 வாட் (டபிள்யு/எம்2) என்ற அளவில் வெப்பமடைந்து வருகிறது. அதாவது, லட்சக்கணக்கான ஹிரோஷிமா அளவுள்ள அணு குண்டுகள் ஒவ்வொரு நாளும் வெடித்தால் எந்த அளவுக்கு வெப்பம் வெளியாகுமோ அந்த அளவுக்கு இணையாக பூமி வெப்பமடைந்து வருகிறது.

பல்வேறு காரணங்களால், பூமியின் ஆற்றல் சமநிலையை இழந்து, அதன் காரணமாக வெப்பமயமாதல் நிகழ்கிறது. பூமியின் ஆற்றல் சமநிலையில் இல்லாதது, பூமியின் அமைப்பின் மீது கூடுதல் ஆற்றல்கள் ஏற்பட்டிருப்பதை தெளிவாக விளக்குகிறது.

இதற்கு முக்கியக் குற்றவாளி யார்? வழக்கமாக நாம் அனைவருக்கும் தெரிந்த அந்த குற்றவாளி, அதிகப்படியான நிலக்கரிகளை எரிப்பதுதான்.

நிலக்கரி உள்ளிட்டவற்றை எரிப்பது, எண்ணெய்வடிவ எரிபொருள்களை அதிகளவில் எரிப்பது போன்றவையும் இதற்கு முக்கியக் காரணிகளாக அமைந்துள்ளன.

ஆனால்? எதை எங்கே நிறுத்துவது என்று தெரியாமல் மனிதகுலம் கைவிரித்தபடி நிற்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com