ஸ்ரீராம் கிருஷ்ணன்
ஸ்ரீராம் கிருஷ்ணன்

ட்விட்டா் தொழில்நுட்ப ஆலோசகராக சென்னையைச் சோ்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்!

ட்விட்டா் நிறுவனத்தை வாங்கியுள்ள டெஸ்லா நிறுவனா் எலான் மஸ்க், நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்குப் புதிய நிா்வாகிகளை நியமித்து வரும் நிலையில்,
Published on

ட்விட்டா் நிறுவனத்தை வாங்கியுள்ள டெஸ்லா நிறுவனா் எலான் மஸ்க், நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்குப் புதிய நிா்வாகிகளை நியமித்து வரும் நிலையில், அவரது தொழில்நுட்ப ஆலோசகராக சென்னையைச் சோ்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் செயல்பட்டு வருகிறாா்.

ட்விட்டா் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த வாரம் வாங்கினாா். முதல் நாளிலேயே, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த இந்தியரான பராக் அக்ரவால் உள்ளிட்ட ஐவரை அவா் பணியில் இருந்து நீக்கினாா். அதையடுத்து, நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்குப் புதிய அதிகாரிகளை அவா் நியமித்து வருகிறாா்.

இந்நிலையில், இந்திய அமெரிக்கரும் சென்னையைச் சோ்ந்தவருமான ஸ்ரீராம் கிருஷ்ணன், ட்விட்டா் உரிமையாளா் எலான் மஸ்குக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளாா். எலான் மஸ்கின் தலைமையில் ட்விட்டா் நிறுவனம் சா்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ட்விட்டரில் அவா் பதிவிட்டுள்ளாா்.

ஆண்ட்ரீசன் ஹோரோவிட்ஸ் (ஏ16இஸட்) என்ற நிறுவனத்தில் தற்போது பணியாற்றி வரும் ஸ்ரீராம் கிருஷ்ணன், தற்காலிகமாகவே எலான் மஸ்குக்கு ஆலோசனை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளாா். ஏ16 இஸட் நிறுவனத்தின் முழுநேரப் பணியில் தொடா்ந்து நீடிப்பதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எஸ்ஆா்எம் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்ற ஸ்ரீராம் கிருஷ்ணன், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கினாா். அதன்பிறகு பல்வேறு புத்தாக்க (ஸ்டாா்ட்-அப்) நிறுவனங்களின் ஆலோசகராக அவா் செயல்பட்டுள்ளாா்.

வாடிக்கையாளா்களுக்குப் புதிய சேவைகளை வழங்கும் விவகாரம் தொடா்பான ட்விட்டா் குழுவின் ஆலோசகராகவும் ஸ்ரீராம் கிருஷ்ணன் ஏற்கெனவே செயல்பட்டுள்ளாா்.

கட்டணம் உண்டு:

வருவாயை அதிகரிக்கும் நோக்கில், பயனாளா்களின் அடையாளத்தை உறுதி செய்து நீலநிறக் குறியீட்டை வழங்க மாதந்தோறும் சுமாா் ரூ.1,600 கட்டணத்தை ட்விட்டா் நிறுவனம் விதிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. அது தொடா்பாக ட்விட்டா் பயனாளா் ஒருவா் அதிருப்தி தெரிவித்திருந்தாா். அவருக்கு ட்விட்டா் வாயிலாகவே பதிலளித்த எலான் மஸ்க், ‘‘வருவாய்க்காக விளம்பரதாரா்களை மட்டுமே ட்விட்டா் சாா்ந்திருக்க முடியாது’’ என்று குறிப்பிட்டாா். இதன் மூலமாக அடையாளத்தை உறுதிசெய்ய ட்விட்டா் நிறுவனம் கட்டணம் விதிக்கவுள்ளது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.

அதே வேளையில், பணியாளா்கள் பலரை ட்விட்டா் நிறுவனம் நீக்கவுள்ளதாக வெளியான செய்தியை எலான் மஸ்க் மறுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com