ட்விட்டரை வாங்கும் எலான் மஸ்க்? கடந்து வந்த பாதை!

டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44பில்லியன் டாலருக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டரை வாங்கும் எலான் மஸ்க்? கடந்து வந்த பாதை!
Published on
Updated on
3 min read

டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம், ட்விட்டர் நிறுவனத்திற்கும், எலான் மஸ்க்கிற்கும் நீண்ட நாட்களாக நீடித்து வரும் சட்டப் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டரை வாங்கும் முயற்சியில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கடந்து வந்த பாதை பின்வருமாறு:

 
ஜனவரி 31: எலான் மஸ்க் ட்விட்டரின் பங்குகளை சிறிது சிறிதாக வாங்கத் தொடங்கினார். மார்ச் மாத பாதியில் ட்விட்டர் நிறுவனத்தில் 5 சதவிகித பங்குகளை தன்வசப்படுத்தினார் எலான் மஸ்க்.

மார்ச் 26: ட்விட்டர் பக்கத்தில் 80 மில்லியன் ஃபாலோவர்களுடன் செயல்பட்டு வந்த எலான் மஸ்க் ட்விட்டருக்கு மாற்றாக ஒரு சமூக வலைதளத்தை உருவாக்க நினைத்தார். மேலும், ட்விட்டரில் சுதந்திரமான கருத்துகள் முன்வைக்கப்பட முடியாமல் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இது குறித்து ட்விட்டர் நிர்வாக இயக்குநர்களுடன் பேசினார்.
 

மார்ச் 27: ட்விட்டரில் தனது பங்குகளின் சதவிகிதம் அதிகரிப்பது குறித்து ட்விட்டர் நிறுவனத்திற்கு தெரியப்படுத்தினார். அதன் தலைமைச் செயல் அதிகாரியுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், ட்விட்டரை வாங்குவது அல்லது அதற்கு மாற்றாக புதிய சமூக வலைதளம் உருவாக்குவது குறித்தும் அறிவித்தார்.

ஏப்ரல் 4: எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் அதிக பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரராக மாறினார். அவர் மொத்த ட்விட்டர் பங்குகளில் 9 சதவிகிதத்தை தன்னிடத்தில் பெற்றிருந்தார். அந்த பங்குகளின் மதிப்பு 3 பில்லியன் டாலர்கள் ஆகும்.


ஏப்ரல் 5: ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவராக எலான் மஸ்க் மாறினார். ஆனால், அவருக்கு ஒரு நிபந்தனை வைக்கப்பட்டது. அதன்படி, ட்விட்டர் நிறுவனத்தில் 14.9 சதவிகித்திற்கும் அதிகமான பங்குகளை அவர் வாங்கக் கூடாது என்பதாகும்.

ஏப்ரல் 11: ட்விட்டர் தலைமைச் செயல் அதிகாரி பராக் அக்ரவால், எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவன நிர்வாக இயக்குநர்களில் ஒருவராக இணைய முடியாது என அறிவித்தார்.

ஏப்ரல் 14: எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்தார்.


ஏப்ரல் 15: எலான் மஸ்கின் ட்விட்டரை வாங்கும் திட்டத்திற்கு எதிராக ஒருமித்த கருத்தோடு ட்விட்டர் நிர்வாக இயக்குநர்கள் சார்பில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
 

ஏப்ரல் 21: எலான் மஸ்க் 46.5 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்திற்கு விலை பேசினார். இதனால், ட்விட்டர் நிர்வாக இயக்குநர்கள் எலான் மஸ்க்குடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப்பட்டது.


ஏப்ரல் 25: எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்க விரும்புவதாக தெரிவித்தார். அதனை தனது சொந்த நிறுவனமாக  மாற்ற நினைத்தார். அதற்கு அவர், ட்விட்டரில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக காரணம் கூறினார்.

ஏப்ரல் 29: எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் 8.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக விற்பதாக அறிவித்தார்.

மே 5: பல்வேறு முதலீட்டார்களுடன் பேசி ட்விட்டர் நிறுவனத்தை வாங்க வேண்டும் என்பதில் எலான் மஸ்க் ஆர்வம் காட்டினார்.


மே 10: எப்படி ட்விட்டரில் மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறார் என்பதை எலன் மஸ்க் கூறினார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை அவர் மீண்டும் செயலுக்கு கொண்டு வருவேன் என்றார். மேலும், ட்விட்டர் கணக்கை முடக்குவது என்பது தவறான முடிவு எனவும் அவர் தெரிவித்தார்.

மே 13: எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். ட்விட்டரில் எத்தனைப் போலி கணக்குகள் உள்ளது என்பதை கணக்கிடப்போவதாக அவர் தெரிவித்தார். இதனால், ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன. டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் உயர ஆரம்பித்தது. 


ஜூன் 6: ட்விட்டரில் உள்ள போலியான கணக்குகள் தொடர்பான விவரங்களை அந்த நிறுவனம் தர மறுப்பதால் தனது ட்விட்டரை வாங்கும் எண்ணத்தை முடித்துக் கொள்ளப் போவதாக எலான் மஸ்க் அச்சுறுத்தினார்.


ஜூலை 8: ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த தகவல்களை அந்த நிறுவனம் வழங்க மறுப்பதால் ட்விட்டர் நிறுவனத்தைவாங்கும் திட்டத்தை கைவிடப் போவதாக எலான் மஸ்க் தெரிவித்தார். இதனையடுத்து, ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் மீது வழக்கு தொடுக்கும் என அச்சுறுத்தியது.

ஜூலை 12: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை உறுதி செய்யக் கோரி எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடுத்தது. எலான் மஸ்க் பதிலுக்கு ட்விட்டர் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்தார்.

ஜூலை 19: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கினை அக்டோபரில் நீதிமன்றம் விசாரிக்கும் என அறிவித்தார்.


ஆகஸ்ட் 23: முன்னாள் ட்விட்டர் தலைமைச் செயல் அதிகாரி ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் போலிக் கணக்குகளை அடையாளம் காண்பதில் அலட்சியமாக இருப்பதாக குற்றம்சாட்டினார். அந்தப் போலி கணக்குகளால் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக தெரிவித்தார். இதனை உணர்ந்த எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள குறைகளை கண்டறிந்து அதனை சரிசெய்வதற்காக அந்த நிறுவனத்தை வாங்க நினைப்பதாக தெரிவித்தார்.

அக்டோபர் 4: எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது இந்த முடிவு ட்விட்டர் நிறுவனத்திற்கும், அவருக்கும் இடையேயான இந்த சட்டப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவது குறித்து எலான் மஸ்க் தரப்பில் இதுவரை அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com