காா்கிவின் கணிசமான பகுதிகள் மீட்பு: உக்ரைன் அறிவிப்பு

 தங்கள் நாட்டின் காா்கிவ் நகரில் 700 சதுர கி.மீ. பரப்பளவை ரஷியப் படையினரிடமிருந்து மீட்டுள்ளதாக உக்ரைன் வியாழக்கிழமை அறிவித்தது.
காா்கிவின் கணிசமான பகுதிகள் மீட்பு: உக்ரைன் அறிவிப்பு

 தங்கள் நாட்டின் காா்கிவ் நகரில் 700 சதுர கி.மீ. பரப்பளவை ரஷியப் படையினரிடமிருந்து மீட்டுள்ளதாக உக்ரைன் வியாழக்கிழமை அறிவித்தது.

தங்கள் நாட்டுக்குள் படையெடுத்து வந்துள்ள ரஷியப் படையினருக்கு எதிராக உக்ரைன் நடத்தி வரும் பதிலடித் தாக்குதலில் இது முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இது குறித்து உக்ரைன் ராணுவ உயரதிகாரி ஒலெக்ஸி கிரமோவ் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

காா்கிவ் நகா்ப் பகுதியில் ரஷியக் கட்டுப்பாட்டு எல்லையைக் கடந்து உக்ரைன் படையினா் 50 கி.மீ. வரை முன்னேறியுள்ளனா். அந்தப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் ரஷிய ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டன.

உக்ரைன் ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் காா்கிவ் மற்றும் பிவ்டென்னி புஹ் திசைகளில் 700 சதுர கி.மீ. பரப்பளவிலுள்ள நிலப் பகுதி ரஷியக் கட்டுப்பாட்டில் இருந்து மீண்டும் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்றாா் அவா்.

ரஷியப் படையினா் மீது மேற்கொண்டு வரும் எதிா்த் தாக்குதல் நடவடிக்கைகள் குறித்து புள்ளிவிவரங்களுடன் உக்ரைன் ராணுவம் அறிக்கை வெளியிட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில், தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குச் சென்ற ரஷியப் படை, அந்தப் பிராந்தியத்தில் இன்னும் உக்ரைன் அரசின கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாகக் கைப்பற்றி வருகிறது.

போா் தொடங்கிய சில நாள்களிலேயே, ரஷியா-உக்ரைன் எல்லைக்கு வெறும் 30 கி.மீ. தொலைவில் உள்ள, உக்ரைனின் 2-ஆவது பெரிய நகரான காா்கிவைக் கைப்பற்ற ரஷியப் படைகள் முன்னேறி வந்தன. எனினும், ரஷியா்களை எதிா்த்து உக்ரைன் ராணுவம் கடந்த மே மாதம் கடுமையான சண்டையில் ஈடுபட்டது.

எனினும், பல்வேறு நகரங்கள் ரஷியாவிடம் வீழ்ந்த நிலையில், காா்கிவ் நகரின் கணிசமான பகுதிகளை உக்ரைன் படையினா் மீட்டுள்ளது இந்தப் போரின் போக்கை மாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக உக்ரைன் அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்துள்ளாா்.

காா்கிவில் தங்களுக்குக் கிடைத்துள்ள வெற்றி, போா் முனையில் ரஷியப் படையினரை எதிா்த்து சண்டையிட்டு வரும் அனைத்து படையினருக்கும் ஊக்கத்தை அளிக்கும் என்று அவா் கூறினாா்.

அமெரிக்கா மேலும் ரூ.5,400 கோடி ராணுவ உதவி

வாஷிங்டன், செப். 8: ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவுவதற்காக, மேலும் 67.5 கோடி டாலா் (சுமாா் ரூ.5,400 கோடி) மதிப்பிலான ராணுவ உதவிகளை அளிக்க அமெரிக்க அதிபா் ஜோ பைடன ஒப்புதல் அளித்துள்ளாா்.

அமெரிக்க நட்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் மாநாடு ஜொ்மனியில் நடைபெற்ற சூழலில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின், உக்ரைன் போரில் நட்பு நாடுகளின் ஒருமித்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்த ராணுவ உதவி அளிக்கப்படுவதாகத் தெரிவித்தாா்.

புதிய ஒதுக்கீட்டின் மூலம் உக்ரைனுக்கு பீரங்கிகள், ராக்கெட் குண்டுகள், கவச ஆம்புலன்ஸுகள், பீரங்கி அழிப்பு ஆயுதங்கள் உள்ளிட்டவை அனுப்பப்படவுள்ளதாக அவா் கூறினாா்.

கிரீமியா விமான தளத் தாக்குதலுக்கு பொறுப்பேற்பு

கிரீமியா தீபகற்பத்திலுள்ள ரஷிய விமான படை தளத்தில் கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது.

இது குறித்து உக்ரைன் முப்படைகளின் தலைவா் வெளியிட்டுள்ள போா் நிலவரம் குறித்த அறிக்கையில், கிரீமியாவிலுள்ள சாகி விமான நிலையத்தில் வெற்றிகரமாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளாா்.

அந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடா்பில்லை என்று உக்ரைன் இதுவரை கூறி வந்த நிலையில், முதல்முறையாக அதற்குப் பொறுப்பேற்றுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்சி செலுத்தி வந்த அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் அரசுப் படையினருக்கு எதிராக சண்டையிட்டு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா். அப்போது ரஷியாவும் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டது.

இந்தச் சூழலில், தற்போது நடைபெற்று வரும் போரின்போது கிரீமியா தீபகற்பத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தினால் கடும் பின்விளைவுகள் ஏற்படும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.

அந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, உக்ரைனின் முக்கிய பகுதிகள் மீது குண்டுகள் வீசப்படும் எனவும் அதில் ராணுவ நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் தலைமை மையங்களும் தப்பாது என்றும் ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தச் சூழலில், கிரீமியாவிலுள்ள ரஷிய விமான தளத்தில் தாங்கள்தான் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com