
பெட்ரோல் விலை உயர்வு: வீதியில் இறங்கிய பெரு மக்கள்
பெரு நாட்டில் அதிகரித்து வரும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரு நாட்டின் நாளுக்குநாள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும் அதிகரித்துவரும் சுங்கக் கட்டண உயர்வும் மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
இந்நிலையில் எரிபொருள் மற்றும் சுங்கக் கட்டண விலை உயர்வை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் லிமாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக தற்போது ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | புதன்கிழமைதோறும் சைக்கிள் நாள்: லட்சத்தீவுகள் அறிவிப்பு
மேலும் எரிபொருள் விலை உயர்வை குறைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை மாதத்திற்கு 10 சதவிகிதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக பெரு நாட்டில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை கடந்த ஆண்டைக் காட்டிலும் 37 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.