ஒரு மாதம் கடந்துவிட்டது, சீன விமான விபத்துக்கான காரணம் மட்டும்?

சீன விமான விபத்தில், அதில் பயணித்த 132 பேர் பலியான சம்பவம் நடந்து ஒரு மாத காலம் கடந்துவிட்ட நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து எதுவும் வெளியாகவில்லை.
சீன விமான விபத்து
சீன விமான விபத்து


சீன விமான விபத்தில் 132 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து ஒரு மாத காலம் கடந்துவிட்ட நிலையில், விபத்துக்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை எதுவும் வெளியாகவில்லை.

அந்நாட்டு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், விமானத்தில் எந்த சந்தேகப்படும் காரணியும் கிடைக்கப்பெறவில்லை. விமானிகள் அல்லது மோசமான வானிலை போன்ற வெளிப்புற காரணிகளும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டிகள் மிகவும் சேதமடைந்திருக்கும் நிலையில், அதில் பதிவான கடைசி நிமிட உரையாடல்கள், விமானிகளின் குரல்கள் போன்றவற்றை துல்லியமாகக் கேட்டறிந்து, விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் பணியில் விசாரணை அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கருப்புப் பெட்டியிலிருந்து தகவல்களைத் திரட்டும் பணியில், அமெரிக்காவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் இணைந்து உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் தென்மேற்கு மாகாணமான யுன்னான் தலைநகா் குன்மிங்கிலிருந்து தொழில் மையமாக விளங்கும் குவாங்ஜோ நோக்கிச் சென்ற போயிங் 737 ரக விமானம், ஹுஜோ நகரத்துக்கு உள்பட்ட டெங்ஷியான் மலைப் பகுதியில் மார்ச் 21ஆம் தேதி உள்ளூா் நேரப்படி மதியம் 2.20 மணிக்கு விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 123 பயணிகளும், 9 ஊழியா்களும் பயணித்தனா்.

இதைத் தொடா்ந்து, விபத்து நடைபெற்ற இடத்தில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை மீட்புப் பணி நடைபெற்றது. சம்பவ இடம் மூன்று பக்கங்களும் மலையால் சூழப்பட்டுள்ளதால் அங்கு நடந்து அல்லது இருசக்கர வாகனத்தில்தான் மீட்புப் படையினா் செல்ல முடிந்தது.

விமானம் விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து சேறுபடிந்த பணப் பைகள் (பா்ஸ்), ஏடிஎம் அட்டைகள், பயணிகளின் அலுவலக அடையாள அட்டைகளை மட்டுமே மீட்க முடிந்ததாகவும், பயணிகளில் ஒருவா்கூட உயிருடன் மீட்கப்படவில்லை என்றும் அதிகாரி ஒருவா் கூறியதாக சீனாவின் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதவிர விமான தரவுகளையும் விமானிகளின் உரையாடலையும் பதிவுசெய்யும் இரண்டு கருப்புப் பெட்டிகள் மீட்கப்பட்டன. ஆனால் அவை பலத்த சேதமடைந்திருந்தன.

இதனிடையே, விமானம் விபத்துக்குள்ளானதை நேரில் பாா்த்த சென் வெய்ஹோ என்பவா் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘‘மலைப் பகுதியில் உள்ள இடைவெளியில் விமானம் வேகமாக விழுந்தது. விழுந்த சில வினாடிகளில், விமானம் நொறுங்கியது’’ என்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com