
கோப்புப்படம்
கடந்த 2021ஆம் ஆண்டில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான அகதிகள் மத்திய தரைக்கடல் மற்றும் அட்லாண்டிக் கடல் வழியாக பயணம் செய்ய முயன்று காணாமல் போயுள்ளதாக ஐநா அவை தெரிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் ஒவ்வொரு ஆண்டும் சஹாரா பாலைவனத்தைக் கடந்தும், மத்திய தரைக்கடல் மற்றும் அட்லாண்டிக் கடல் வழியாக ஐரோப்பாவிற்கு நீண்ட, ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர்.
இதையும் படிக்க | ‘அனுமன் ஜெயந்தியால் மக்களைப் பிரிக்க விடமாட்டோம்’: சிவசேனை எம்பி
அகதிகள் பயணங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகள் அமைப்பு வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டது. அதில் மத்திய தரைக்கடல் மற்றும் அட்லாண்டிக் கடல் வழியாக ஐரோப்பாவிற்கு தப்பிக்க முயன்ற அகதிகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
இதில் கடந்த ஆண்டு 3077 பேர் தங்களது புலம்பெயர் பயணத்தின்போது பலியாகி இருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என தெரிவித்துள்ளது. இது கடந்த 2020ஆம் ஆண்டின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள ஐநா அவை ஒவ்வொரு ஆண்டும் புலம்பெயர் பயணங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க | ‘அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம்’: எச்சரிக்கும் வடகொரியா
இதுவரை 2022ஆம் ஆண்டில், 553 பேர் பலியாகியுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, பெரும்பாலானவர்கள் மத்திய தரைக் கடல் பகுதியில் இறந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
புலம்பெயர் பயணங்களால் பலியானர்கள் அல்லது காணாமல் போனவர்கள் துனிசியா, மொராக்கோ, மாலி, கினியா, எரித்திரியா, எகிப்து, ஐவரி கோஸ்ட், செனகல், ஈரான், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.