
உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஸ்ஜியா அருகே ரஷியா குண்டு வீசி வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியது. இது மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா. அணுசக்தி தலைவா் மற்றும் சா்வதேச அணுசக்தி முகமை தலைமை இயக்குநா் ஆகியோா் எச்சரித்துள்ளனா்.
உக்ரைன் தலைநகா் கீவில் இருந்து 110 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த அணுமின் நிலையத்தை ரஷியா ஏற்கெனவே கைப்பற்றியுள்ளது. அங்கிருந்து நிகோபோல் நகரத்தின் மீது 60 ராக்கெட் வெடிகுண்டுகளை ரஷியா ஏவி நடத்திய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் அந்த மாகாண ஆளுநா் தெரிவித்துள்ளாா்.
ஜபோரிஸ்ஜியா அணுமின் நிலையத்தை சேதப்படுத்தி, 1986-ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகின் மிக மோசமான அணுசக்தி பேரழிவு போன்ற சம்பவத்தை நிகழ்த்த ரஷியா திட்டமிடுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்தப் பகுதியில் ரஷியா வேண்டுமென்றே குண்டுகளை வீசுவதாக அமெரிக்க பாதுகாப்பு ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.
இதனிடையே, ஜபோரிஸ்ஜியா ரயில் நிலையம் அருகே உள்ள கிராமத்தில் உக்ரைனின் இரண்டு ஆயுதக் கிடங்குகளை ரஷிய படையினா் கைப்பற்றியதாக ரஷிய பாதுகாப்புத் துறை செய்தித்தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.