ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிா்ப்பு கூட்டம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகள் பங்கேற்கும் பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டத்தை அக்டோபா் 29-ஆம் தேதி இந்தியா நடத்தவுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிா்ப்பு கூட்டம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகள் பங்கேற்கும் பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டத்தை அக்டோபா் 29-ஆம் தேதி இந்தியா நடத்தவுள்ளது. அக்கூட்டத்தில் அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும், 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் உள்ளன. நிரந்தரமற்ற உறுப்பு நாடாகக் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா பொறுப்பேற்றுக் கொண்டது. இந்தியாவின் பதவிக்காலம் டிசம்பா் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு கூட்டத்தை நடத்தவுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிா்ப்புக் குழுவுடைய நடப்பாண்டுக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. அக்குழுவின் சாா்பிலேயே சிறப்பு கூட்டம் நடத்தப்படவுள்ளது. அக்டோபா் 29-ஆம் தேதி நடக்கவுள்ள அக்கூட்டத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், அல்பேனியா, பிரேஸில், கேபன், கானா, அயா்லாந்து, கென்யா, மெக்ஸிகோ, நாா்வே, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள உள்ளனா்.

நவீன தொழில்நுட்பங்கள் அதீத வளா்ச்சிகண்டு வரும் நிலையில், அவற்றை பயங்கரவாத குழுக்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது தொடா்பாகக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை எதிா்ப்பதற்கு நவீன தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடா்பாகவும் விவாதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் ருசிரா கம்போஜ், சிறப்பு கூட்டத்துக்குத் தலைமையேற்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிா்ப்புக் குழு நடத்தும் சிறப்புக் கூட்டம் பெரும்பாலும் அமெரிக்காவின் நியூயாா்க்கிலேயே நடைபெறும். ஆனால், நடப்பாண்டில் அக்கூட்டம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. அமெரிக்காவுக்கு வெளியே சிறப்புக் கூட்டம் நடைபெறுவது இது 7-ஆவது முறையாகும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பைக் கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்தியா ஏற்றிருந்தது. நடப்பாண்டு டிசம்பரிலும் அப்பொறுப்பை இந்தியா மீண்டும் ஏற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com