
பிரான்ஸ் நாட்டில் மிகவும் மோசமான வறட்சி நிலவுவதாக அந்நாட்டு பிரதமர் எலிசபெத் போர்னே தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் எலிசபெத் கூறியிருப்பதாவது: “ பிரான்ஸில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் வரலாறு காணாத அளவிற்கு வறட்சி அதிகரித்துள்ளது. இந்த கோடைக் காலம் தொடங்கியது முதல் இதுவரை மூன்று முறை வெப்ப அலை வீசியுள்ளது. நாம் இக்கட்டான சூழலில் இருக்கிறோம். நாட்டின் பல பகுதிகளிலும் நீர் இருப்பு குறைந்துள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல இந்தக் கடும் வறட்சியினால் நமது நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் உயிரினங்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.” என்றார்.
இதையும் படிக்க: கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் விரைவில் திருமணம் ?
வானிலை அறிவிப்பில், பிரான்ஸில் இதே அளவில் வெப்பநிலை தொடர்ந்தாலோ அல்லது மேலும் அதிகரித்தாலோ வெயிலினால் ஆவியாகும் நீரின் அளவு அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விளை நிலங்களுக்கான நீர்ப்பாசனத்திற்கான நீர்த் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும். இது நாட்டிலுள்ள தற்போது நிலவும் வறட்சியை மேலும் அதிகப்படுத்தும். அரசு வறட்சியினைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகள் அதிகம் கவனம் கொடுத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மழை பெய்யாத காரணத்தால் பிரான்ஸில் உள்ள 62 பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.