
கிழக்கு உக்ரைனில் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள சிறைச்சாலையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட ராக்கெட் குண்டுத் தாக்குதல் குறித்து விசாரிக்க உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளதாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் அறிவித்துள்ளாா்.
டொனட்ஸ்க் மாகாணம், ஒலெனிவ்கா பகுதியில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் 53 உக்ரைன் போா்க் கைதிகள் பலியாகினா்; 75 கைதிகள் காயமடைந்தனா். இந்தத் தாக்குதலை ரஷியா நடத்தியதாக உக்ரைனும், உக்ரைன் நடத்தியதாக ரஷியாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், உண்மையைக் கண்டறிவதற்காக விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாக குட்டெரெஸ் தற்போது அறிவித்துள்ளாா்.
இதற்கிடையே, சிறைச் சாலைத் தாக்குதலை உக்ரைன்தான் நடத்தியது என்று காட்டுவதற்காக பொய்யான தடயங்களை ரஷிய அதிகாரிகள் உருவாக்கி வருவதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது.