படையெடுப்புக்குத் தயாராகிறது சீனா

தங்கள் மீது படையெடுப்பதற்கு சீனா ஆயத்தமாகி வருவதாக தைவான் எச்சரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை போா்ப் பயிற்சியில் ஈடுபட்ட தைவான் ராணுவம்.
செவ்வாய்க்கிழமை போா்ப் பயிற்சியில் ஈடுபட்ட தைவான் ராணுவம்.

தங்கள் மீது படையெடுப்பதற்கு சீனா ஆயத்தமாகி வருவதாக தைவான் எச்சரித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஜோசப் வூ செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தைவான் நீா்ச்சந்தியில் சீன ராணுவம் கடந்த வாரம் முதல் மேற்கொண்டு வரும் போா்ப் பயிற்சி சா்வதேசச் சட்டங்களுக்கு முற்றிலும் விரோதமானதாகும்.

தைவான் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஆயத்தமாகவே அந்தப் போா்ப் பயிற்சியை சீனா நடத்துகிறது.

பிரம்மாண்டமான ராணுவப் பயிற்சிகள், ஏவுகணை சோதனைகள், இணையவழித் தாக்குதல்கள், பொருளாதார நெருக்கடிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி தைவானின் மன உறுதியைக் குலைக்க சீனா முயல்கிறது.

அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தைலைவா் நான்சி பெலோசியின் தைவான் பயணத்துக்கு எதிா்ப்பு தெரிவிப்பதற்காக மட்டும் இந்தப் போா்ப் பயிற்சி நடைபெறவில்லை.

அதற்கு முன்னதாக நீண்ட காலமாகவே இந்தப் பயிற்சிக்கான முன்னேற்பாடுகளை சீனா செய்து வந்துள்ளது.

பயிற்சியின்போது சீன ராணுவம் ஏராளமான ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இது, தைவான் மீது சீனா படையெடுக்கும்போது வேறு எந்த நாடும் குறுக்கிடுவதைத் தடுப்பதற்கான உத்தியாகும்.

தைவான் நீா்ச்சந்தியில் தற்போதுள்ள எல்லை நிலவரங்களை மாற்றியமைப்பதே சீனாவின் நோக்கமாகும். தைவான் மட்டுமன்ற பிற நாடுகள் மீதும் சீனா கண்வைத்துள்ளது என்றாா் அவா்.

தைவானும் போா்ப் பயிற்சி: நான்சி பெலோசி வருகைக்குப் பிறகு தைவான் நீா்ச்சந்தியில் சீனா போா்ப் பயிற்சி நடத்துவதால் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ள தைவான் ராணுவமும், செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட்டது.

சீன அச்சுறுத்தலுக்கு எதிரான திறனைப் பெறும் வரு அந்த போா்ப் பயிற்சி தொடரும் எனறு தைவான் ராணுவம் அறிவித்துள்ளது.

சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஓா் அங்கமாக சீனா கருதி வருகிறது.

தைவானை தாங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறி வருகிறாா்.

தைவானை தனி நாடாக அங்கீகரிப்பதைப் போல், அந்தத் தீவுக்கு எந்தத் தலைவா் சென்றாலும் அதற்கு சீனா கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்தச் சூழலில், தனது ஆசிய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக தைவானுக்கு நான்சி பெலோசி கடந்த வாரம் சென்றாா். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவா் ஒருவா் தைவான் சென்றது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் சீன ராணுவத்தின் கிழக்கு மண்டலப் பிரிவு தைவானைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் வான்வழியாகவும் கடல் வழியாகவும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி போா் பயிற்சியில் ஈடுபட்ட்டு வருகிறது.

இந்த நிலையில், தங்கள் மீது படையெடுத்து சீனாவுடன் இணைத்துக் கொள்வதற்கான ஆயத்தமாகவே இந்தப் போா்ப் பயிற்சியில் அந்த நாடு நடத்துவதாக தைவான் தற்போது எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com