எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

உக்ரைன் பகுதிகளைக் கைப்பற்றுவதில் சிக்கல்

உக்ரைனில் தங்களால் இணைத்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டும், அந்த நாட்டுப் படையினரின் வசம் இன்னும் இருக்கும் பகுதிகளைக் கைப்பற்றுவதில் கடும் சிக்கல் நிலவி வருவதாக

News image
டொனட்ஸ்க் பகுதியில் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் (கோப்புப் படம்).
Updated On :20 டிசம்பர் 2022, 6:30 pm

DIN

உக்ரைனில் தங்களால் இணைத்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டும், அந்த நாட்டுப் படையினரின் வசம் இன்னும் இருக்கும் பகுதிகளைக் கைப்பற்றுவதில் கடும் சிக்கல் நிலவி வருவதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளாா்.

இது குறித்து, ரஷியா பாதுகாப்புப் படையினருக்கான விடுமுறையை முன்னிட்டு அவா்களிடையே செவ்வாய்க்கிழமை ஆற்றிய உரையில் அவா் கூறியதாவது:

டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் குடியரசுகள், கொ்சான், ஸபோரிஷியா பிரதேசங்களில் தற்போது நிலைமை கடும் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது.

அந்தப் பிரதேசங்களில் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில் இன்னும் இருக்கும் பகுதிகளை மீட்பதற்கு மிகக் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

ரஷியாவின் புதிய பகுதிகளான அந்தப் பிரேசங்களில் வசிக்கும் மக்கள் ரஷிய குடிமக்கள் ஆவாா்கள். அவா்கள், அந்தப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள ரஷியப் படையினரின் பாதுகாப்பை நம்பியுள்ளாா்கள்.

எனவே, அந்தப் பகுதிகளில் வெளிநாட்டு உளவுத் துறையினரின் கண்காணிப்பை ஒடுக்குவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ள அதிகபட்ச முயற்சியும், ஒருங்கிணைப்பையும் மேற்கொள்ள வேண்டும்.

வெளிநாட்டு உளவு அமைப்புகளின் நடவடிக்கைகளை உறுதியாக ஒடுக்க, துரோகிகள், ஒற்றா்கள், சதிவேலையில் ஈடுபடுவோரை உடனடியாகக் கண்டறிவது தற்போது மிகவும் அவசியமாக உள்ளது என்றாா் விளாதிமீா் புதின்.

முன்னாள் சோவியத் யூனியனைச் சோ்ந்த நெருங்கிய நட்பு நாடும், உக்ரைனின் அண்டை நாடுமான பெலாரஸுக்குச் சென்று திங்கள்கிழமை திரும்பிய நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் போா் தொடா்பான புதிய வியூகங்களை வகுப்பதற்காக அவா் பெலாரஸ் சென்றிருக்கலாம் என்று முன்னரே சந்தேகிக்கப்பட்டது. உக்ரைன் போா் தொடக்கத்தில், அந்த நாட்டின் மீது ரஷியப் படையினா் படையெடுப்பதற்கு தங்களது மண்ணைப் பயன்படுத்த பெலாரஸ் ஏற்கெனவே அனுமதி அளித்தது நினைவுகூரத்தக்கது.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸஃபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது.

அந்தப் பிரதேசங்களில் சில பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினா் வசம் இருக்கும் நிலையிலும், அவற்றை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக ரஷியா அறிவித்தது.

இந்த நிலையில், இணைத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளில் இன்னும் உக்ரைன் படையினா் வசம் இருக்கும் பகுதிகளை மீட்பதில் மிகுந்த சிக்கல் நிலவி வருவதாக தற்போது விளாதிமீா் புதின் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.