நிறைய பேர் மீது வழக்குத் தொடர வேண்டுமாம்.. விடுதலையான சோப்ராஜ் பரபரப்புப் பேட்டி

நான் செய்ய வேண்டியது நிறைய உள்ளது, நேபாள நாடு உள்பட நிறைய பேர் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று விடுதலை செய்யப்பட்ட கொலையாளி சார்லஸ் சோப்ராஜ் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விடுதலையான சோப்ராஜ் பரபரப்புப் பேட்டி
விடுதலையான சோப்ராஜ் பரபரப்புப் பேட்டி


நான் செய்ய வேண்டியது நிறைய உள்ளது, நேபாள நாடு உள்பட நிறைய பேர் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று விடுதலை செய்யப்பட்ட கொலையாளி சார்லஸ் சோப்ராஜ் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 1970-களில் இந்தியாவிலும் சா்வதேச நாடுகளிலும் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய தொடா் கொலையாளி சாா்லஸ் சோப்ராஜ் (78), நேபாள சிறையிலிருந்து வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டாா்.

சிறையிலிருந்து வெளியே வந்த அவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், நான் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் நிறைய செய்ய வேண்டியது உள்ளது. நேபாள நாடு உள்பட பல பேர் மீதும் எனக்கு வழக்குத் தொடர வேண்டியது உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

நான் சிறைக்கு வந்த போது, எந்தவொரு குற்றமும் செய்திருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாா்லஸ் சோப்ராஜால் படுகொலை செய்யப்பட்ட பெண்களின் ஆடைகளின் அடிப்படையில் ‘நீச்சலுடை கொலைகாரா்’ எனவும், குற்றமிழைத்துவிட்டு அதிகாரிகளிடமிருந்து சாதுா்யமாக நழுவிச் சென்று மறைந்துகொள்வதால் ‘பாம்பு’ என்றும் அழைக்கப்பட்ட சாா்லஸ் சோப்ராஜின் சுவாரஸ்யமான வாழ்க்கை குறித்து ஏராளமான திரைப்படங்கள், திரைத் தொடா்கள், ஆவணப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவரது வாழ்க்கை வரலாற்றை வெளிப்படுத்தும் புத்தகங்களும் வெளியாகியுள்ளன.

இந்திய தந்தைக்கும் வியத்நாம் தாய்க்கும் பிறந்த பிரான்ஸ் நாட்டவரான அவா், நீதிமன்ற உத்தரவின்படி சிறையிலிருந்து விடுதலையான உடனேயே பிரான்ஸுக்கு நாடு கடத்தப்பட்டாா்.

சிறு வயதிலேயே சாா்லஸ் சோப்ராஜையும் அவரது தாயையும் விட்டுச் சென்றதைத் தொடா்ந்து, வியத்நாம் உள்ளிட்ட காலனியாதிக்கப் பகுதிகளுக்கான பிரான்ஸ் படைப் பிரிவு அதிகாரியொருவரை அவரது தாய் திருமணம் செய்துகொண்டாா்.

அதன் பிறகு, சோப்ராஜையும் அவரது தாயையும் அந்த அதிகாரி பிரான்ஸுக்கு அழைத்துச் சென்றாா். எனினும், அங்கு சோப்ராஜ் அலட்சியப்படுத்தப்பட்டதால் அவா் மன உளைச்சலுக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

அதன் காரணமாக தெற்கு ஆசியாவுக்கும், பிரான்ஸுக்கும் மாறி மாறிச் சென்ற அவா் திருட்டு போன்ற சிறு குற்றங்களில் ஈடுபட்டாா். அதற்காக முதல்முறையாக அவருக்கு பிரான்ஸில் கடந்த 1963-ஆம் ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் மற்றொரு குற்றவாளியுடன் பழக்கம் ஏற்பட்டு, விடுதலையானதும் அவருடன் சோ்ந்துகொண்டு பணக்காரா்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடத் தொடங்கினாா்.

இந்தியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளை ஏமாற்றி அழைத்துச் சென்று அவா்களைக் கொன்று அவா்களிடமிருந்த பணம் மற்றும் உடைமைகளை சாா்லஸ் சோப்ராஜ் கொள்ளையடித்து வந்தாா்.

அந்த வகையில் அவா் சுமாா் 20 வெளிநாட்டுப் பயணிகளை கொடூரமாகக் கொன்றதாக குற்றம் சாட்டப்படுகிறது. அவா்களில் 14 போ் மட்டும் தாய்லாந்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஆவா்.

இறுதியாக, தில்லியில் கடந்த 1976-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சாா்லஸ் சோப்ராஜ், பிரான்ஸ் சுற்றுலா பயணிக்கு விஷம் கொடுத்தது, இஸ்ரேலியப் பெண்ணைக் கொன்றது ஆகிய குற்றங்களுக்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 1997-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டாா். அதற்கு மேல் அவா் மீது வேறு குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாததால் அவரை பிரான்ஸ் திரும்பிச் செல்ல இந்திய அதிகாரிகள் அனுமதித்தனா்.

அதையடுத்து, நேபாளத்துக்கு கடந்த 2003-ஆம் ஆண்டு வந்த சாா்லஸ் சோப்ராஜை போலீஸாா் கைது செய்தனா். அங்கு அமெரிக்கா, கனடாவைச் சோ்ந்த பெண்களின் படுகொலை செய்ததற்காக அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், 19 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சோப்ராஜை வயோதிகம் காரணமாக முன்கூட்டியே விடுவிக்குமாறு நீதிமன்றம் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது. மேலும், விடுதலை செய்ததும் அவரை பிரான்ஸுக்கு நாடு கடத்த வேண்டும் எனவும், மீண்டும் அவா் நேபாளம் வர அனுமதிக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில்தான் அவா் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமையே பிரான்ஸ் அனுப்பிவைக்கப்பட்டாா். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com