உக்ரைனை தாக்கும் ரஷியா...உலக தலைவர்கள் சொல்வது என்ன?

உக்ரைனுக்கு தொடர்ந்து உதவி அளிக்கப்படும் என்றும் ராணுவ படையெடுப்புக்கு உலக நாடுகள் ரஷியாவையே பொறுப்பேற்க வைக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், மேற்கத்திய நாடுகள் இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. தொலைக்காட்சியில் உரையாற்றிய ரஷிய அதிபர் புதின், உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, பல்வேறு நகரங்களில் ரஷியா ஏவுகணை மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குல் நடத்திவருவதாக உக்ரைன் அலுவலர்கள் தெரிவித்தனர்.

உக்ரைனுக்கு தொடர்ந்து உதவி அளிக்கப்படும் என தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ராணுவ படையெடுப்புக்கு உலக நாடுகள் ரஷியாவையே பொறுப்பேற்க வைக்கும் என்றார்.

எதிர் தரப்பினர் எதையும் செய்யாதபோது நியாயமற்ற தாக்குதலை ரஷியா மேற்கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "உக்ரைன் மக்களுக்காக தொடர்ந்து பிரார்த்தனை மேற்கொண்டுவருகிறேன். இந்த தாக்குதலால் நிகழும் மரணம் மற்றும் அழிவுக்கு ரஷ்யா மட்டுமே பொறுப்பு. மேலும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இதற்கு ஒன்றுபட்ட, தீர்க்கமான வழியில் பதிலளிப்பார்கள்" என்றார்.

ரஷியாவின் ராணுவ நடவடிக்கை குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ட்விட்டர் பக்கத்தில், "உக்ரைன் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத போது ரஷியா தாக்குதலை நடத்தியதன் மூலம் இரத்தம் சிந்தும் அழிவுப்பாதையை அதிபர் புதின் தேர்ந்தெடுத்துள்ளார். இங்கிலாந்தும் நமது நட்பு நாடுகளும் தீர்க்கமாக பதிலடி கொடுக்கும். உக்ரைனில் நடந்த பயங்கரமான நிகழ்வுகளால் திகைத்து போயிருக்கிறோம். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து என்னிடம் விவாதித்தார்" என பதிவிட்டுள்ளார்.

பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, "உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் சர்வதேச ஒழுங்கின் அடித்தளத்தை அசைத்து பார்த்துள்ளது. தற்போதைய நிலையை மாற்றுவதற்கான ஒருதலைப்பட்ச முயற்சிகளை சர்வதேச ஒழுங்கு அனுமதிக்காது. ரஷ்யாவை வன்மையாக கண்டிக்கிறோம். அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் ஒருங்கிணைத்து, முயற்சிகளை மேற்கொண்டு இதை விரைவாக சமாளிப்போம்" என்றார்.

இதை நியாயப்படுத்த முடியாத செயல் என இத்தாலி விமிரிசித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் மரியோ ட்ராகி கூறுகையில், "உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு இத்தாலிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இது நியாயமற்றது. நியாயப்படுத்த முடியாதது. இந்த தருணத்தில் உக்ரேனிய மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் இத்தாலி நெருக்கமாக உள்ளது. ஒற்றுமையுடனும் உறுதியுடனும் உடனடியாகப் பதிலளிப்பதற்காக ஐரோப்பிய மற்றும் நேட்டோ நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறோம்" என்றார்.

இதற்கு பிரான்ஸ் நாடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com