ரிஷி சுனக், பிரிட்டன் நிதியமைச்சர்: சர்ச்சை முதல் ராஜிநாமா வரை...

அரசியல் பயணத்தில் பல்வேறு சர்ச்சைகளை கடந்த பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக், தனது பதவியை செவ்வாய்க்கிழமை மாலை ராஜிநாமா செய்தார்.
ரிஷி சுனக்
ரிஷி சுனக்

அரசியல் பயணத்தில் பல்வேறு சர்ச்சைகளை கடந்த இந்திய வம்சாவளியான பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக், தனது பதவியை செவ்வாய்க்கிழமை மாலை ராஜிநாமா செய்தார்.

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நிதியமைச்சா் ரிஷி சுனக், 2009ஆம் ஆண்டு இந்திய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனா் நாராயணமூா்த்தியின் மகளான அக்ஷதா மூா்த்தியை திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசில் 2020ஆம் ஆண்டு நிதியமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ரிஷி சுனக், கரோனா நெருக்கடிக்கு மத்தியில் நிதித்துறையை திறமையாக கையாண்ட நிலையில், போரிஸ் ஜான்சனுக்கு அடுத்து பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்படும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக கருதப்பட்டார்.

இதற்கிடையே, ரிஷியின் மனைவி அக்ஷதா மூா்த்தி வரி ஏய்ப்பு செய்ததாக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

பிரிட்டன் நிதியமைச்சரை திருமணம் செய்து கொண்ட போதிலும், இந்திய குடியுரிமையைதான் அக்ஷதா மூா்த்தி வைத்திருந்தார். பிரிட்டனில் அந்த நாட்டுக் குடியுரிமை பெறாமல் வசிப்பவா்கள் வெளிநாடுகளிலிருந்து பெறும் வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டியதில்லை.

அந்த வகையில், அக்ஷதா தன் கைவசமுள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 0.9 சதவீத பங்குகள் மூலம் கிடைத்து வரும் கோடிக்கணக்கான ஈவுத் தொகைக்கு பிரிட்டனில் வரி செலுத்தாமல் இருந்து வந்தாா்.

எனினும், இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததும் தனது சா்வதேச வருமானத்துக்கும் பிரிட்டனில் வரி செலுத்துவேன் என்று ஏப்ரல் 9ஆம் தேதி அக்ஷதா தெரிவித்தார்.

இதுகுறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ரிஷி அளித்த விளக்கம், “எனது மனைவி அவரது தாய்நாடான இந்தியா மீது வைத்துள்ள பற்றை கைவிட என்னால் வலியுறுத்த முடியாது. இந்தியாவில் இரட்டை குடியுரிமை வழங்கும் நடைமுறை இல்லை. மேலும், வயதான பெற்றோருடன் சென்று இருக்கவும் எனது மனைவி விரும்புகிறாா். பிரிட்டனில் குடியுரிமை பெறவில்லை என்றாலும், முறையான வரியை செலுத்தி வருகிறார்” என்றார்.

இந்த பிரச்னை ஓய்ந்த நிலையில், கரோனா விதிமுறைகளை மீறி தனது அலுவலகத்தில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்திய விவகாரத்தில் போரிஸ் ஜான்ஸன் மற்றும் அவரது அமைச்சா்களுக்கு எதிராக சா்ச்சைகள் எழுந்தன.

இந்தச் சூழலில், பிரதமா் பதவியைத் தொடரும் தகுதியை போரிஸ் ஜான்ஸன் இழந்துவிட்டதாகக் கூறி, கன்சா்வேட்டிவ் கட்சியைச் சோ்ந்த 54 அல்லது அதற்கு மேற்பட்ட எம்.பி.க்கள் கட்சியின் உறுப்பினா் குழு தலைவா் சா் கிரஹாம் பிராடியிடம் கடிதம் அளித்தனா்.

அதையடுத்து, போரிஸ் ஜான்ஸனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், 211 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இருப்பினும், போரிஸ் ஜான்சன் அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கட்சிக்குள் தொடர்ந்து அவருக்கு எதிரான குரல் அதிகரித்து வந்தன.

இந்நிலையில், தலைமைக் கொறடாவாக இருந்த கிறிஸ் பிஞ்சர் மதுபோதையில் தகராறு செய்தததாக புதன்கிழமை குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று மன்னிப்பு கேட்ட சில நிமிடங்களில், நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர்.

பதவி விலகல் குறித்து டிவிட்டரில் பதிவிட்ட ரிஷி தெரிவித்திருப்பது,

இந்த அரசு திறமையுடனும், சரியான முறையிலும் செயல்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அமைச்சர் பதவியில் நான் இருப்பது இதுவே கடைசியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இரண்டு அமைச்சர்களின் ராஜிநாமா பிரிட்டன் அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழலில், நிதியமைச்சராக நதீம் சஹாவியையும், சுகாதாரத் துறை அமைச்சராக ஸ்டீவ் பார்க்லேவையும் நியமித்து போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com