முன்னாள் பிரதமர் படுகொலை: ஜப்பானிலும் தலை தூக்குகிறதா துப்பாக்கி கலாசாரம்?

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது ஜப்பானில் துப்பாக்கி கலாசாரம் பரவத் தொடங்கியிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது ஜப்பானில் துப்பாக்கி கலாசாரம் பரவத் தொடங்கியிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

குற்றங்கள் குறைவாக நடைபெறும் நாடுகளில் ஒன்றான ஜப்பானில் முன்னாள் பிரதமர் சுடப்பட்டுள்ளது அந்த நாட்டு மக்களை மட்டுமல்லாது உலக நாடுகளையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மேற்கு ஜப்பானின் நாரா பகுதியில் முன்னாள் பிரதமர் பேசிக்கொண்டிருக்கையில் மர்ம நபர் ஒருவரால் சுடப்பட்டார். அபே பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவர் பின் பகுதியிலிருந்து சுடப்பட்டார்.

பின்னர், சம்பவ இடத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அதிக அளவில் துப்பாக்கிச் சூடு நடைபெறும் அமெரிக்காவிற்கு மாறாக ஜப்பானில் அதிக அளவில் துப்பாக்கிச் சூடு குற்றங்கள் நடைபெறுவது அரிதான ஒன்று. இந்த சூழலில் இன்று முன்னாள் பிரதமர் அபே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது துப்பாக்கி காலசாரம் ஜப்பானில் பரவத் தொடங்கியுள்ளதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரிதாக நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்:

12.5 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஜப்பானில் கடந்த ஆண்டு முழுவதிலுமே மொத்தமாக வெறும் 10-க்கும் குறைவான துப்பாக்கிச் சூடு சம்பவங்களே நடந்துள்ளன. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 4 பேர் காயமடைந்தனர் என ஜப்பான் நாட்டின் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 10 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 8 சம்பவங்கள் கும்பலாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் டோக்கியோவில் 61 துப்பாக்கிகள் கைப்பற்றபட்ட போதிலும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் கூட அங்கு பதிவாகவில்லை. இந்நிலையில், இன்று இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவரை பிடித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். வருகிற ஞாயிற்றுக் கிழமை ஜப்பானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவங்களை அதிகம் சந்திக்காத ஜப்பான் நாட்டு மக்கள் இன்றைய சம்பவத்தினை நினைத்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ஜப்பானில் அதிக அளவில் நடைபெறும் குற்றம்:

ஜப்பானில் நடைபெறும் பொதுவான குற்றங்களில் அதிக அளவில் கத்தியால் தாக்கப்படுவதே வழக்கமான ஒன்றாகும். ஆயுதங்கள் வைத்துக் கொள்வது தொடர்பான விவாதங்கள் கூட ஜப்பானில் அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. ஜப்பான் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் என நிகோன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஷிரோ கவமோட்டோ தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் கூறிருப்பதாவது: “இன்று பிரச்சாரம் நடைபெற்ற இடத்தில் அதிக அளவிலான மக்கள் கூடியிருந்தனர். அதனால், பாதுகாப்பு அளிப்பது என்பது சவாலானதாக இருந்தது. இந்த சம்பவத்தின் மூலம் ஜப்பானுக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி கலாச்சார எச்சரிக்கையை கருத்தில் கொண்டு ஜப்பானில் உள்ள அரசியல் சார்ந்த தலைவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கடைசியாக பெரிய அளவில் துப்பாக்கிச் சூடு எப்போது நடைபெற்றது ?

கடந்த முறை இது போன்ற துப்பாக்கிச் சூடு கடந்த 2019ஆம் ஆண்டு அரங்கேறியுள்ளது. அப்போது ஒரு கும்பலைச் சேர்ந்த முன்னாள் நபர் டோக்கியோவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடுமையான விதிமுறைகள்:

ஜப்பான் நாட்டின் சட்டத்தின்படி கத்தி, துப்பாக்கி போன்ற ஆயதங்கள் வைத்திருப்பது சட்டவிரோதமான செயல் ஆகும். ஒருவர் ஆயுதங்கள் வைத்துக் கொள்ள வேண்டும்என்றால் சிறப்பு உரிமம் பெற வேண்டும்.அதேபோல துப்பாக்கியினை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவர் ஆயுதம் வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அவர் பல்வேறு நிலைகளை கடந்தாக வேண்டும். எந்த உபயோகத்திற்கு துப்பாக்கி தேவைப்படுகிறது என்பது முதல் அவரது குடும்ப மற்றும் பல்வேறு தனிப்பட்ட விவரங்களைப் பெற்று முழுமையான தேவையை ஆராய்ந்த பிறகே உரிமம் வழங்கப்படுகிறது. இத்தனை கடுமையான படிநிலைகளைத் தாண்டிதான் ஒருவருக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமம் வழங்கப்படுகிறது.

அடுத்தது என்ன?

முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளது அந்த நாட்டில் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான விதிமுறைகளை மேலும் கடுமையாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com