
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
இலங்கையின் தற்போதைய நிலைமை மிகவும் சிக்கலானது என இந்திய வெளியுறத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் புரட்சி வெடித்துள்ளது. தொடர்ந்து விலைவாசி உயர்ந்து வருவதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் ஆளும் அரசின் முக்கிய தலைவர்களின் இருப்பிடங்களையும் சூறையாடி வருகின்றனர்.
இதையும் படிக்க: துபைக்கு செல்ல முயன்ற பசில் ராஜபட்ச: சுற்றிவளைத்த பயணிகள்; என்ன நடந்தது?
முக்கியமாக, பரபரப்பான சூழலில் நேற்று(திங்கள்கிழமை) அதிபர் பதவியை ராஜிநாமா செய்த கோத்தபய ராஜபட்ச, தனது குடும்பத்தினருடன் ஹெலிகாப்டர் மூலம் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதாகவும், இலங்கையை விட்டு வெளியேறிய கோத்தபய மற்றும் அவரது குடும்பத்தினர், அருகில் உள்ள ஒரு நாட்டில் இருப்பதாகவும் இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவர் அபேவர்த்தன தெரிவித்தார். ஆனால், அவர் எந்த நாட்டுக்குச் சென்றார் என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் “இலங்கையின் தற்போதைய நிலைமை உணர்ச்சிவசமும் சிக்கலும் கொண்டது. நம்முடைய அண்டை நாட்டினருக்கு நாம் ஆதரவு தர வேண்டும். இந்தக் கடினமான காலகட்டத்தைத் தாண்ட அவர்களுக்கு உதவ வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
#WATCH The situation in Sri Lanka is sensitive & complicated. Our support is for the people of Sri Lanka because they are our neighbours. We want to help them go through a very difficult phase in their lives: EAM Dr S Jaishankar in Thiruvananthapuram pic.twitter.com/HCxy6pKnY8
— ANI (@ANI) July 12, 2022