முகநூலைப் பயன்படுத்த அஞ்சும் இந்தியப் பெண்கள்: காரணம் என்ன?

இந்தியாவில் பாலியல்ரீதியிலான அச்சங்களுடனே பெண்கள் பேஸ்புக் பயன்படுத்தி வருவதாக மெட்டா நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் பாலியல்ரீதியிலான அச்சங்களுடனே பெண்கள் முகநூலைப் பயன்படுத்தி வருவதாக மெட்டா நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

முகநூல் நிறுவனம் உலகம் முழுவதும் பயனர்களைக் கொண்ட சமூக ஊடகமாகும். மெட்டா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்திற்கு பல்வேறு வயதிலும் பயனர்கள் உள்ளனர். தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் வணிக வளர்ச்சி தொடர்பான காரணங்களுக்காக இந்நிறுவனம் மாத மற்றும் காலாண்டு ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. 

இந்தியாவில் கடந்த ஆண்டு மே மாதம் நடைமுறைக்கு வந்த புதிய தொழில்நுட்ப விதிப்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான பயனா்களைக் கொண்ட சமூகவலைதள நிறுவனம், அதில் வெளியாகும் பதிவுகள் மீதான புகாா்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாதந்தோறும் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 4 மாத காலத்தில் முகநூல் நிறுவனத்தின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை வெகுவாக சரிவை சந்தித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட மெட்டா நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வின்படி இந்தியாவில் முகநூல் பயன்படுத்தும் பயனர்களில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பாலியல்ரீதியிலான அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாகவும், இதன்காரணமாக முகநூல் ஆண்களை மையமாகக் கொண்ட தளமாகவே இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

முகநூல் தளத்தைப் பயன்படுத்தும்போது பெண்கள் தங்களது பாதுகாப்பு குறித்து அதிகம் கவலை கொள்வதாகத் தெரிவித்துள்ள மெட்டா நிறுவனம் வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளைக் காட்டிலும் முகநூலின் வளர்ச்சி கணிசமாகக் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

அதேசமயம் இந்தியாவில் தொலைதொடர்பு நிறுவனங்கள் உயர்த்திய செல்போன் கட்டணங்களும் முகநூல் தளத்தின் தினசரி பயன்பாடு குறைவதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மொத்த பெண் பயனர்களில் 79 சதவிகிதத்தினர் முகநூல் பயன்பாட்டின்போது ஆபாசம் மற்றும் பாலியல் தொல்லை குறித்து கவலைப்படுவதாகவும், தனது சொந்தப் பக்கத்தில் புகைப்படத்தைப் பதிவிட்டபின் சராசரியாக முன்பின் தெரியாத 367 நட்பு அழைப்புகள் பெண் பயனருக்கு வருவதாகவும், குறிப்பிட்ட சில பின்னூட்டங்களினால் பெண்கள் தங்களது கணக்குகளை பூட்டிவைப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

முன்னதாக கடந்த மே மாதம் ஆட்சேபத்துக்குரிய வகையில் வெளியான 1.75 கோடி பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதனை நிா்வகிக்கும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதில் 30.7 லட்சம் பதிவுகள் வன்முறையைத் தூண்டும் விதத்திலும், 20.6 லட்சம் பதிவுகள் ஆபாசமாகவும், 90.3 லட்சம் பதிவுகள் முறையற்ற கருத்துகளையும் வெளிப்படுத்தியதாகக் கூறிய மெட்டா நிறுவனம், இதன் காரணமாக அந்தப் பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com