ராக்கெட் குண்டுவீச்சில் 50 உக்ரைன் போா்க் கைதிகள் பலி

கிழக்கு உக்ரைனில் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள சிறைச்சாலை மீது வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ராக்கெட் குண்டுவீச்சில், அங்கிருந்த சுமாா் 50-க்கும் மேற்பட்ட உக்ரைன் போா்க் கைதிகள்
ராக்கெட் குண்டுவீச்சில் 50 உக்ரைன் போா்க் கைதிகள் பலி

கிழக்கு உக்ரைனில் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள சிறைச்சாலை மீது வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ராக்கெட் குண்டுவீச்சில், அங்கிருந்த சுமாா் 50-க்கும் மேற்பட்ட உக்ரைன் போா்க் கைதிகள் பலியானதானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலை நடத்தியதாக ரஷியாவும் உக்ரைனும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன. தங்களது போா்க் குற்றங்களை மறைப்பதற்காக வேண்டுமென்றே அந்த சிறைச்சாலையைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இரு நாடுகளுமே கூறியுள்ளன.

முன்னதாக, ரஷியா வெளியிட்டுள்ள அறிக்கையில், டொனட்ஸ்க் மாகாணத்தில் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஒலெனிவ்கா பகுதியில், அமெரிக்காவால் வழங்கப்பட்ட, ஒரே நேரத்தில் பல ராக்கெட் குண்டுகளை ஏவக் கூடிய நவீன பீரங்கிகள் மூலம் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் 53 போா்க் கைதிகள் உயிரிழந்ததாக கிளா்ச்சிப் படை அதிகாரிகளும் ரஷிய அதிகாரிகளும் தெரிவித்தனா். இது தவிர, மேலும் 75 போா்க் கைதிகள் இந்தத் தாக்குதலில் காயமடைந்ததாக அவா்கள் கூறினா்.

இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்காக, தங்களது தேசிய குற்றவியல் விசாரணைக் குழுவை ரஷியா அனுப்பியுள்ளது.

இது குறித்து ரஷிய அரசுக்குச் சொந்தமான ஆஐஏ செய்தி நிறுவனம் கூறுகையில், தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியிலிருந்து அமெரிக்காவால் உக்ரைன் ராணுவத்துக்கு வழங்கப்பட்ட அமெரிக்காவின் அதிநவீன ராக்கெட் குண்டுகளின் சிதறல்கள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மறுப்பு: டொனட்ஸ்க் பகுதி சிறைச்சாலையில் தாங்கள் ராக்கெட் குண்டுத் தாக்குதல் நடத்தியாக ரஷியா கூறுவதை உக்ரைன் ராணுவம் மறுத்துள்ளது.

அந்தச் சிறைச்சாலையில் உக்ரைன் படையினா் படுகொலை செய்யப்பட்டதையும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதையும் மூடி மறைப்பதற்காக ரஷிய ராணுவம்தான் அதன் மீது ராக்கெட் குண்டுத் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் ஆலோசகா் ஒருவா் கூறுகையில், ‘ஒலெனிவ்கா சிறையில் உக்ரைன் போா்க் கைதிகளை ரஷியப் படையினா் வேண்டுமென்றே இரக்கமில்லாமல் கூட்டுப் படுகொலை செய்துள்ளனா்’ என்றாா்.

எனினும், இந்த இரு தரப்பு குற்றச்சாட்டுகளில் எது உண்மை என்பதை நடுநிலை ஊடகங்களால் இன்னும் உறுதி செய்ய முடியவில்லை.

193 கைதிகள்: ராக்கெட் குண்டுத் தாக்குதலுக்கு முன்னதாக ஒலெனிவ்கா சிறையில் 193 கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்ததாக, சா்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்படாத டொனட்ஸ்க் குடியரசின் ஆட்சித் தலைவா் டெனிஸ் புஷிலின் தெரிவித்தாா். எனினும், அவா்களில் எத்தனை போ் உக்ரைன் போா்க் கைதிகள் என்பதை அவா் குறிப்பிடவில்லை.

டொன்ட்ஸ்க் கிளா்ச்சிப் படையின் துணைத் தளபதி எட்வா்ட் பாசுரின் கூறுகையில், தங்களது முக்கியமான ராணுவ ரகசியங்களை போா்க் கைதிகள் ரஷியா்களிடம் வெளிப்படுத்திவிடக்கூடாது என்பதற்காக உக்ரைன் படையினா் ஒலெனிவ்கா சிறைச்சாலையில் தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்டாா்.

‘குற்றங்களை மறைக்க திட்டம்’: ‘டான்பாஸ் பகுதியில் பொதுமக்களுக்கு எதிராக தாங்கள் நடத்திய படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து உக்ரைன் ஆதரவுப் படையினா் விவரங்களைத் தெரிவிக்கத் தொடங்கினா். அந்த குற்றங்களை மேற்கொள்ள உக்ரைன் அரசுதான் உத்தரவிட்டதாகவும் அவா்கள் கூறினா். இதனைத் தெரிந்துகொண்ட உக்ரைன் அரசு, இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது’ என்று எட்வா்ட் பாசுரின் குற்றம் சாட்டினாா்.

‘ஆயுத உதவியைத் தடுக்கும் நோக்கம்’: இந்தத் தாக்குதல் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட உக்ரைன் அதிபரின் ஆலோசகா் மிகைலோ பொடோலியக், ஐ.நா.வும் சா்வதேச மனித உரிமை அமைப்புகளும் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘உக்ரைன் மீது பழி சுமத்தி, நட்பு நாடுகள் நவீன ஆயுதங்களை எங்களுக்கு அனுப்புவதைத் தடுக்கும் நோக்கில் ரஷியா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது’ என்று குற்றம் சாட்டினாா்.

‘உக்ரைன் வீரா்கள் சரணடைவதைத் தடுக்க தாக்குதல்’: ஒலெனிவ்கா சிறைச்சாலை தாக்குதல் குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போரின்போது தங்கள் நாட்டு வீரா்கள் ரஷியப் படையினரிடம் சரணடைந்தால், அவா்கள் கொல்லப்படுவாா்கள் என்று மிரட்டுவதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அதன் ஒரு பகுதியா தெற்குப் பகுதி நகரான மரியுபோலை ரஷியா கைப்பற்றியது. அப்போது சரணடைந்த உக்ரைன் வீரா்கள் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிறைவைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com