அதிகரிக்கும் ஆயுதப் பயன்பாடு: நியூசிலாந்து பிரதமரிடம் ஆலோசனை கேட்ட அமெரிக்க அதிபர்

அதிகரித்துவரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களைத் தடுப்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னிடம் ஆலோசனை கோரினார்.
அதிகரிக்கும் ஆயுதப் பயன்பாடு: நியூசிலாந்து பிரதமரிடம் ஆலோசனை கேட்ட அமெரிக்க அதிபர்

அதிகரித்துவரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களைத் தடுப்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னிடம் ஆலோசனை கோரினார்.

பசுபிக் பிராந்தியத்தில் நிலவும் அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு ஜெசிந்தா மேற்கொள்ளும் முதல் அமெரிக்கப் பயணம் இதுவாகும்.

இந்த சுற்றுப்பயணத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த ஜெசிந்தா உக்ரைன் விவகாரம், காலநிலை மாற்றம், வர்த்தக உறவுகள், பசுபிக் பிராந்தியத்தின் அரசியல் சூழல் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசித்தார்.

மேலும் இந்த சந்திப்பின்போது பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “உலகளாவிய அரசியல் சூழலில் நியூசிலாந்தின் பங்கு முக்கியமானது” எனத் தெரிவித்தார்.

காலநிலை மாற்றம், வர்த்தகம் உள்ளிட்டவற்றில் இரு நாடுகளும்  இணைந்து செயல்படுவதற்கும் பைடன் விருப்பம் தெரிவித்தார். 

முன்னதாக டெக்‌ஸாஸில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் குறிப்பிட்டு பேசிய பைடன் இந்த விவகாரத்தில் நியூசிலாந்தின் ஆலோசனையைக் கோரினார். துப்பாக்கிகள் பயன்பாடு தொடர்பாக நியூசிலாந்து அரசின் கட்டுப்பாடுகளைக் குறித்து கேட்டறிந்த பைடன் அமெரிக்காவில் ஆயுதப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் நியூசிலாந்து அரசின் ஆலோசனைகளை வரவேற்பதாகத் தெரிவித்தார். 

கடந்த மே மாதம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுளள தொடக்கநிலைப் பள்ளியொன்றில் 18 வயது இளைஞா் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவா்கள், 2 ஆசிரியா்கள் பலியாகினா்.

டெக்ஸாஸ் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு, அமெரிக்காவில் கடந்த 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்பட்டுள்ள மிக மோசமான தாக்குதலாகும்.

அமெரிக்காவில் இந்த ஆண்டில் மட்டும் நடத்தப்பட்டுள்ள 27-ஆவது பள்ளித் தாக்குதல் இதுவாகும். அந்த நாட்டில் தற்காப்புக்காக பொதுமக்கள் சக்திவாய்ந்த ஆயுதங்களை வைத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com