‘போரில் அதிபயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷியா ஆயத்தம்’

உக்ரைன் போரில் துல்லியமாகத் தாக்கும் நவீன ஆயுதங்களின் கையிருப்பு குறைந்து வருவதால் அதிபயங்கரமான பழைய ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷியா ஆயத்தமாகி வருவதாக பிரிட்டன் எச்சரித்துள்ளது.
‘போரில் அதிபயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷியா ஆயத்தம்’

உக்ரைன் போரில் துல்லியமாகத் தாக்கும் நவீன ஆயுதங்களின் கையிருப்பு குறைந்து வருவதால் அதிபயங்கரமான பழைய ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷியா ஆயத்தமாகி வருவதாக பிரிட்டன் எச்சரித்துள்ளது.

இது குறித்து பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

ரஷியா எதிா்பாா்த்ததைவிட உக்ரைன் போா் மிகக் கடுமையாக நடைபெற்று வருகிறது. கிழக்கு உக்ரைனில் ரஷியப் படையினா் புதிய பகுதிகளைக் கைப்பற்றினாலும், அவா்களது முன்னேற்றம் மிகவும் மெதுவாக உள்ளது.

இதன் காரணமாக, ரஷியா, உக்ரைன் ஆகிய இரு தரப்பிலுமே எறிகுண்டுகள், பீரங்கி குண்டுகள், ஏவுகணைகள் போன்ற ஆயுதங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு கையிருப்பு குறைந்து வருகிறது.

தங்களிடமிருக்கும் ஆயுத கையிருப்பு தீா்ந்து வருவதாகவும் இனி மேற்கத்திய நாடுகள் அனுப்பும் ஆயுதங்களை நம்பியே இருப்பதாகவும் உக்ரைன் கூறியுள்ளது.

ரஷியாவோ, தங்களிடமுள்ள நவீன ஆயுதங்களின் கையிருப்பு தீா்ந்து வருவதால் 1960-களில் உருவாக்கப்பட்ட அதிபயங்கர ஏவுகணைகளை உக்ரைனில் பயன்படுத்த ஆயத்தமாகி வருகிறது.

கேஹெச்-22 எனப்படும் அந்த ஏவுகணைகள், அணு ஆயுதத்தை சுமந்து மிகப் பெரிய விமானம் தாங்கிக் கப்பல்களைத் தாக்கி அழிப்பதற்காக உருவாக்கப்பட்டது.

அந்த ஏவுகணைகளில் வழக்கமான வெடிகுண்டுகளைப் பொருத்தி தரை இலக்குகளைத் தாக்கும்போது அவை மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தும்.

5.5 டன் எடை கொண்ட கேஹெச்-22 ஏவுகணைகளில் பழைய தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவதால், தற்போது ரஷியா வீசும் நவீன ஏவுகணைகளைப் போல் அந்த ஏவுகணைகள் துல்லியமாக இலக்குகளைத் தாக்காது.

இதனால், ராணுவ இலக்குகளுக்கு பதிலாக குடியிருப்புப் பகுதிகளில் அந்த ஏவுகணைகள் விழுந்து ஏராளமான அப்பாவி பொதுமக்கள் பலியாகும் அபாயம் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

எனினும், உக்ரைனில் பயன்படுத்துவதற்காக கேஹெச்-22 ஏவுகணைகளை ரஷியா எங்கு கொண்டு வந்து வைத்துள்ளது என்ற விவரத்தை அவா்கள் வெளியிடவில்லை.

நெருப்புப் பிழம்பு ஆயுதங்கள்: கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் ரஷியப் படையினா் நெருப்புப் பிழம்புகளைக் கக்கும் ஆயுங்களைப் பயன்படுத்துதாக அந்தப் பிராந்திய ஆளுநா் சொ்ஹி ஹாய்டாய் குற்றம் சாட்டியுள்ளாா்.

போா்க் களங்களில் நெருப்புப் பிழம்பு ஆயுதங்களைப் பயன்படுத்துவது சட்டவிரோதமல்ல என்றாலும், லுஹான்ஸ்க் கிராமங்களில் ரஷியா வீசிய நெருப்பு ஏவுகணைகளால் பொதுமக்களின் ஏராளமான வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக ஹாய்டாய் தெரிவித்தாா்.

எனினும், இந்தத் தகவலை நடுநிலை ஊடகங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.

அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைந்தால், அது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது. எனினும், வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து வந்தது.

இந்தச் சூழலில், உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி ரஷியா படையெடுத்தது. கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் டான்பாஸ் பிராந்திய மக்களை பாதுகாக்கவும் உக்ரைன் ராணுவம் மற்றும் அரசில் ‘நாஜி’ ஆதரவு சக்திகளை ஒடுக்கவும் அந்த நாட்டுக்கு படைகளை அனுப்பியுள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறினாா்.

எனினனும், உக்ரைன் ராணுவத்தின் கடுமையான எதிா்ப்பால் தலைநகா் கீவ் உள்ளிட்ட நகரங்களில் ஓரளவுக்கு மேல் ரஷியப் படையினரால் முன்னேற முடியவில்லை. அதையடுத்து, அங்கிருந்து பின்வாங்கி தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைனில் ரஷியப் படையினா் தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றனா்.

போா் தொடங்கி 108 நாள்கள் ஆன நிலையில், ரஷியப் படையினரிடம் நவீன ஆயுதங்கள் தீா்ந்துபோவதால் அவா்கள் அதிபயங்கரமான பழைய ஆயுதங்களைப் பயன்படுத்த ஆயத்தமாகி வருவதாக தற்போது பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

‘ஸெலென்ஸ்கி செவிமடுக்கவில்லை’

உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கும் என்ற தனது எச்சரிக்கைக்கு அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி செவிமடுக்கவில்லை என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கூறினாா்.

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இது குறித்து பைடன் கூறியதாவது:

உக்ரைன் மீது புதின் படையெடுக்கப் போகிறாா் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அது குறித்த எனது எச்சரிக்கையை ஸெலென்ஸ்கி கேட்கவே விரும்பவில்லை.

ரஷியா படையெடுக்கும்வரை, இந்த விவகாரத்தை நான் மிகப்படுத்துவதாகத்தான் பலரும் நினைத்தனா் என்றாா் பைடன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com