
பிரசவத்தின் போது குழந்தை தலை துண்டிப்பு; உயிராபத்தில் கர்ப்பிணி
கராச்சி: மருத்துவத் துறையின் கவனக்குறைவால், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், அனுபவமில்லாத ஊழியரைக் கொண்டு நடந்த மகப்பேறு சிகிச்சையின்போது, குழந்தை தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிந்து மாகாணத்தில் 32 வயதான கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தபோது, அனுபவமில்லாத ஊழியரால், குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டதோடு, அந்த தலையையும் கர்ப்பிணியின் வயிற்றுக்குள்ளேயே வைத்து தைத்த கொடூரத்தால், கர்ப்பிணி உயிராபத்தில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
இதையும் படிக்க.. கூகுள் மேப்ஸ் மூலம் சுங்கக் கட்டணத்தை அறியலாம்: எப்படி தெரியுமா?
தார்பார்கர் மாவட்டத்தில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பினி, முதலில் ஊரக ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கு பெண் மருத்துவர்கள் இல்லை. இதனால் போதிய அனுபவமில்லாத ஊழியர் பிரசவம் பார்த்துள்ளதால் இந்த சம்பவம் நேரிட்டதாக, கர்ப்பிணியின் உயிரைக் காப்பாற்றிய எல்யுஎம்எச்எஸ் மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு தலைவர் பேராசிரியர் ரஹீல் சிக்கந்தர் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, கடந்த ஞாயிறன்று கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை மூலம் அனுபவமில்லாத ஊழியர் சிகிச்சை செய்ததில், குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர், அந்த தலையையும் மீண்டும் கர்ப்பிணியின் வயிற்றுக்குள்ளேயே வைத்து தைத்துவிட்டார். இதனால், அப்பெண்ணின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டது. அங்கிருந்த அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கும் அவருக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லாததால், எல்யுஎம்எச்எஸ் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்து வந்தனர்.
அங்கு அவருக்கு உயர் சிகிச்சை அளித்து, கருப்பைக்குள் சிக்கிய குழந்தையின் உடல் அகற்றப்பட்டு, பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது என்றார் சிக்கந்தர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மற்றும் பணி நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியில் இல்லாத மருத்துவர்கள் மற்றும் பெண் ஊழியர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.