ஆப்கனில் கடும் நிலநடுக்கம்: 1,000 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 1,000 பேர் பலியாகினர்; 1,500 பேர் காயமடைந்தனர்.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் பக்டிகா மாகாணத்தில்  நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டடம்.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் பக்டிகா மாகாணத்தில் நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டடம்.

ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 1,000 பேர் பலியாகினர்; 1,500 பேர் காயமடைந்தனர்.
 ஆப்கானிஸ்தானின் கிழக்கே, பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை அதிகாலை 2.24 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 3.24 மணி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
 இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது. நிலநடுக்கத்தின் மையம் 10 கி.மீ. ஆழத்தில் இருந்ததாக நிபுணர்கள் கூறினர்.
 இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் அந்தப் பகுதி கட்டடங்கள் தரைமட்டமாகின. இதில் 1,000 பேர் பலியானதாகவும், 1,500 பேர் காயமடைந்ததாகவும் ஆப்கன் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து இன்னும் முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.
 6 .1 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் மிகக் கடுமையான உயிர்ச் சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்தக் கூடியது. மேலும், 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில் அது அதிக சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று கருதப்படுகிறது.
 நிலநடுக்கத்தின் அதிர்வுகள் 500 கி.மீ. தொலைவு வரை உணரப்பட்டதாகவும், பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் பலர் அதிர்வுகளை உணர்ந்ததாகவும் ஐரோப்பிய நிலநடுக்கவியல் ஆய்வு அமைப்பு தெரிவித்தது.
 நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறியதற்குப் பிறகு அந்த நாட்டின் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ள தலிபான்களுக்கு இந்த நிலநடுக்கம் மிகப்பெரிய சோதனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 மீட்புப் பணி பின்னடைவு: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு பல்வேறு சர்வதேச சேவை அமைப்புகள் அந்த நாட்டிலிருந்து வெளியேறிவிட்டன. இந்தச் சூழலில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மிகவும் கடினமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
 நான்குபுறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில், தொலைதூர கிராமப் பகுதிகளுக்குச் செல்வது சாதாரண காலங்களிலேயே மிகவும் கடினமானதாக இருக்கும். ஏற்கெனவே கரடுமுரடாக இருக்கும் மலைப் பாதைகள், தற்போது நிலநடுக்கம் காரணமாக சேதமடைந்திருக்கக் கூடும் என்பதால் மீட்புக் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
 இந்த பிரச்னைகளைக் கருத்தில்கொண்டு, மீட்புப் பணிகளில் உதவுமாறு சர்வதேச நாடுகளுக்கு தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
 மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் ஆப்கனை நோக்கி விரைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் விவகாரங்களுக்கான ஐ.நா. ஒருங்கிணைப்பாளர் ரமீஸ் அலக்பரோவ் தெரிவித்தார்.
 பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 4,000 போர்வைகள், 800 முகாம் பொருள்கள், 800 சமையலறை சாதனங்களை அனுப்பியுள்ளதாக ஆப்கன் செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது.
 பாகிஸ்தானில்... அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த வானிலை ஆய்வுத் துறையினர், தங்களது கோஸ்ட் நகருக்கு 50 கி.மீ. தென்மேற்கே நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவித்தனர். அந்த நகரம் அமைந்துள்ள கோஸ்ட் மாகாணத்திலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் ஏராளான கட்டடங்கள் சேதமடைந்தன.
 நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு உதவியளிக்கத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அறிவித்துள்ளார்.
 தற்போது ஆப்கன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள பலி எண்ணிக்கை, வடக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த 2002-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்க உயிர்ச் சேதத்துக்கு இணையாக உள்ளது. எனினும், கடந்த 1998-ஆம் ஆண்டில் ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவு கொண்ட மற்றொரு நிலநடுக்கத்தில் 4,500 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.
 அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்: பிரதமர் மோடி
 நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக மோசமான காலகட்டங்களில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா துணையாக இருக்கிறது. அந்நாட்டுக்குத் தேவையான அனைத்து நிவாரணப் பொருள்களையும் விரைந்து வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com