புவி வெப்பமயமாதலால் உலகம் முழுவதும் கடந்த 34 ஆண்டுகளில் நீர்நிலைகளில் நீர் ஆவியாதலின் சதவிகிதம் 58 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் நீர் ஆவியாதல் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வந்தனர்.
அவர்களின் எச்சரிக்கைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக பிரபலமான நேச்சர் இதழில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளன.
இதையும் படிக்க | உறக்கத்தைக் கெடுக்கும் காலநிலை மாற்றம்: ஆய்வு முடிவால் அதிர்ச்சி
அதன்படி புவி வெப்பமயமாதலால் கடந்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 14.2 லட்சம் நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் இதன்காரணமாக வேளாண்மை, தொழில்துறை மற்றும் வீட்டு உபயோகம் உள்ளிட்டவைகளுக்கு எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1985ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நிலவிய வெப்பநிலைகளின் தரவுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் உலகம் முழுவதும் நீர்நிலைகளில் இருந்த பனிக்கட்டிகளின் பரப்பளவு 23 சதவிகிதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க | காலநிலை மாற்றத்தால் இடம்பெயரும் மக்கள்: முன்னணியில் இந்தியா
மேலும் நீர்நிலைகளில் நிலவும் அதீத வெப்பநிலைகளால் நீர் ஆவியாதலின் சதவிகிதம் 58 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், நீர்த்தேக்கங்களில் நீர் ஆவியாதலின் அளவு ஒவ்வொரு பத்தாண்டும் 5.4 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றில் நிலவும் அதீத வெப்பநிலை நீர்நிலைகளின் ஆவியாதலை வேகப்படுத்துவதுடன் பனி உருவாவதையும் தடுக்கிறது. 10.9 லட்சம் நீர்த்தேக்கங்கள் இந்த ஆபத்தில் உள்ளதாகவும், உயர்ந்த நிலப்பரப்பில் உள்ள பகுதிகள் காலநிலை மாற்றத்தால் இவ்விதமாக பாதிப்பிற்குள்ளாவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.