
உறக்கத்தை கெடுக்கும் காலநிலை மாற்றம்: ஆய்வில் வெளியான அதிர்ச்சி முடிவு
காலநிலை மாற்றம் காரணமாக இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் மனிதர்களின் தூங்கும் நேரம் குறையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்ற பாதிப்பு என்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சிக்கலாக உருமாறியுள்ளது. அதீத இயற்கை வள சுரண்டல் காரணமாக பருவநிலை பிறழ்வு, கூடுதல் மழைப்பொழிவு, கட்டுப்படுத்த முடியாத வெள்ளம், புயல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என இயற்கை பேரிடர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதையும் படிக்க | தப்பிக்கவே முடியாதா? அச்சம் தரும் காலநிலை மாற்ற ஆய்வு முடிவுகள்
இந்நிலையில் டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய காலநிலை மாற்றம் தொடர்பான சமீபத்திய ஆய்வு முடிவுகள் ஒன் எர்த் இதழில் வெளியாகியுள்ளன.
மொத்தம் 68 நாடுகளின் 47 ஆயிரத்திற்கும் அதிகமான வயது வந்தோரிடம் இருந்து பெறப்பட்ட 70 லட்சம் தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட்ட இந்த ஆய்வில் மனித நடவடிக்கைகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்தான பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதையும் படிக்க | தீவிரமடையும் காலநிலை மாற்றம்: வெள்ளத்தில் தத்தளிக்கும் தென்னாப்பிரிக்கா
காலநிலை மாற்றத்தால் மனிதர்களின் பொருளாதார மற்றும் தினசரி நடவடிக்கைகளில் அதீத பாதிப்புகள் ஏற்படும் என இந்த ஆய்வு எச்சரித்துள்ளது. அதிகப்படியான வெப்பநிலை உயர்வு காரணமாக இந்த நூற்றாண்டின் இறுதியில் ஒவ்வொரு மனிதரும் ஆண்டுக்கு 50 முதல் 58 மணி நேரம் தங்களது உறக்க நேரத்தை இழப்பர் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காலநிலை மாற்றம் மனிதர்களின் உளவியல் நிலைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கணித்துள்ள விஞ்ஞானிகள் இதன் காரணமாக மருத்துவ சிகிச்சை மற்றும் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.