காலநிலை மாற்றத்தால் இடம்பெயரும் மக்கள்: முன்னணியில் இந்தியா

அதீத காலநிலை மாற்ற விளைவுகளால் இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் 50 லட்சம் பேர் தங்களது வாழ்விடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
புலம்பெயர் கால்கள்...(கோப்புப்படம்)
புலம்பெயர் கால்கள்...(கோப்புப்படம்)

அதீத காலநிலை மாற்ற விளைவுகளால் இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் 50 லட்சம் பேர் தங்களது வாழ்விடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்ற பாதிப்புகள் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. தொழில் புரட்சிக்குப் பிறகான காலத்தில் வளிமண்டலத்தில் அதிகரித்துவரும் கார்பன் செறிவானது புவி வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்து வருகிறது. இதனால் காலநிலை மாற்றம் வேகமாக நிகழ்ந்துவருவதாகவும் புதிய ஆற்றல் மூலங்களாக மாறாமல் இச்சிக்கலை சரி செய்ய முடியாது எனவும் காலநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தீவிர காலநிலை மாற்ற பாதிப்புகளால் இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் மட்டும் 50 லட்சம் பேர் வாழ்வாதாரங்களுக்காக தங்களது வாழ்விடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்ட சமீபத்தில் ஆய்வு முடிவில்  தெரியவந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் புலம்பெயர்ந்தோர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இயற்கை பேரிடர் மற்றும் காலநிலை மாற்ற பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 2.37 கோடி மக்கள் இடம்பெயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதில் ஏறத்தாழ 50 லட்சம் பேரின் இடம்பெயர்வுடன் இந்தியா உலகிலேயே மூன்றாவது பெரிய நாடாக மாறியுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2019ஆம் ஆண்டில் 27 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் 60 லட்சம் பேரும், பிலிப்பின்ஸில் 57 லட்சம் பேரும் காலநிலை மாற்ற பாதிப்பால் இடம்பெயர்ந்துள்ளனர். 2050ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை பேரிடர் காரணமாக 4.5 கோடி மக்கள் தங்களது வாழ்விடங்களிலிருந்து வேறு இடங்களுக்கு இடம்பெயரும் அபாயம் உள்ளதாகவும் அந்த அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பாக உலகளாவிய ஆய்வு நிறுவனமான ஐபிசிசியின் அறிக்கையின்படி இந்தியாவில் ஒடிசா, அசாம், மேகாலயா, திரிபுரா, மேற்குவங்கம், பிகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் காலநிலை மாற்றத்தின் தீவிர பாதிப்பை உணரும் பகுதிகளாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com