
காக்னிசன்ட் மென்பொருள் நிறுவனத்தின் அமெரிக்கத் தலைவர் கிரிகாரி ஹைட்டன்ராச் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காக்னிசன்ட் நிறுவனமானது உலகின் முன்னணி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாக உள்ளது. சுமார் 1850 கோடி அமெரிக்க டாலர்கள் வர்த்தகம் கொண்ட இந்த நிறுவனமானது உலகின் பல்வேறு நாடுகளில் தனது கிளைகளைக் கொண்டுள்ளது.
இதையும் படிக்க | லாபப் பதிவு: சென்செக்ஸ் 150 புள்ளிகள் வீழ்ச்சி - 4 நாள் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி
இந்நிலையில் அமெரிக்காவில் ஹிட்டென்ரச் தலைமையில் காக்னிசன்ட் நிறுவனம் இயங்கி வந்த நிலையில் நிறுவனத்தின் கொள்கை வரம்புகளை மீறி செயல்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் தற்போது பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காக்னிசன்ட் நிறுவனத்தின் அமெரிக்க தலைவர் பொறுப்பில் இருந்து வந்த ஹைட்டன்ராச் அமெரிக்கா, கனடா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் அந்நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கவனித்து வந்தார்.
இதையும் படிக்க | டிவி சந்தையில் 7% பங்களிப்பு: டிசிஎல் இலக்கு
காக்னிசன்ட் நிறுவனத்தின் டிஜிட்டல் அமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் துணை தலைவராக பணியாற்றி வந்த ஹைட்டன்ராச் கடந்த 2021 ஜனவரியில் அந்நிறுவனத்தின் அமெரிக்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஹைட்டன்ராச் பதவிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவரது பொறுப்பிற்கு தற்காலிக தலைவராக அமெரிக்கவாழ் இந்தியரான சூர்யா கும்மடி நியமிக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் தனது கல்லூரி படிப்பை முடித்த சூர்யா கும்மடி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவராவார்.
2000ஆம் ஆண்டிலிருந்து காக்னிசன்ட் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சூர்யா கும்மடி உடல்நலம் மற்றும் வாழ்க்கை அறிவியல் வணிகப் பிரிவில் முதன்மை துணை தலைவராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.