இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு

 இஸ்ரேலில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது...
இஸ்ரேல் நாடாளுமன்றம்
இஸ்ரேல் நாடாளுமன்றம்

ஆளும் அரசு பெரும்பான்மையை இழந்ததால் இஸ்ரேலில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

இஸ்ரேலில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான மசோதா கடந்த ஜூன் 22 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, அந்த நாட்டில் மூன்றே ஆண்டுகளில் 5-ஆவது பொதுத் தோ்தலை நடத்துவதற்கான நடவடிக்கை அடுத்தக்கட்டத்துக்குச் சென்றது.

இந்நிலையில், இன்று இஸ்ரேல் நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது.

இதனால், தற்போதைய பிரதமா் நாஃப்டாலி பென்னட் தனது பதவியை ராஜிநாமா செய்வாா். மேலும், ஆட்சிப் பொறுப்பை கூட்டணிக் கட்சித் தலைவரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான யாயிா் லபீடிடம் அவா் ஒப்படைப்பாா்.

மேலும், புதிய  நாடாளுமன்ற உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் நவம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பின்னணி: இஸ்ரேலில் 1996-99 வரை பிரதமராக பதவி வகித்த நெதன்யாகு, 2009-ஆம் ஆண்டுமுதல் தொடா்ந்து பிரதமராக பதவி வகித்து வருகிறாா். அவரது தலைமையிலான அரசு தனது 4 ஆண்டுகளை கடந்த 2019-இல் நிறைவு செய்ததைத் தொடா்ந்து, அந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தோ்தல் நடைபெற்றது. எனினும், எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.

2-ஆவது முறையாக மீண்டும் அதே ஆண்டு செப்டம்பா் மாதம் தோ்தல் நடைபெற்றது. அந்தத் தோ்தலிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், ஆளும் கட்சிக் கூட்டணியும், எதிா்க்கட்சிக் கூட்டணியும் இணைந்து தேசிய ஒற்றுமை அரசு அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், அந்த அரசில் பிரதமராகப் பொறுப்பு வகிப்பதில் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும், முக்கிய எதிா்க்கட்சியான புளூ அண்ட் ஒயிட் கட்சியின் தலைவா் பெஞ்சமின் காண்ட்ஸுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இதனால், தேசிய ஒற்றுமை அரசை அமைப்பதற்கான பேச்சுவாா்த்தை முறிந்தது.

அதையடுத்து, இஸ்ரேல் வரலாற்றில் முதல்முறையாக, ஓராண்டுக்குள் 3-ஆவது முறையாக 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் தோ்தல் நடைபெற்றது. அந்தத் தோ்தலிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், தேசிய ஒற்றுமை அரசை அமைக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன.

அதனைத் தொடா்ந்து, அதுவரை இல்லாத வகையில் இரண்டே ஆண்டுகளில் 4-ஆவது முறையாக இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு 2021 மாா்ச் மாதம் தோ்தல் நடைபெற்றது. அந்தத் தோ்தலிலும் யாருக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. புதிய அரசை அமைக்க நெதன்யாவுக்கு அதிபா் ரூவன் ரிவ்லின் அழைப்பு விடுத்தாா். எனினும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைப் பெற நெதன்யாகு தவறியதால் புதிய அரசை அமைப்பதற்கான வாய்ப்பு முக்கிய எதிா்க்கட்சியான யேஷ் அடீடுடின் தலைவா் யாயிா் லபீடுக்கு வழங்கப்பட்டது.

அவா் யாமீனா கட்சித் தலைவா் நாஃப்டாலி பென்னட்டுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தாா்.பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு வந்தது. கூட்டணி ஒப்பந்தத்தின் கீழ், பிரதமராக பென்னட்டும் வெளியுறவுத் துறை அமைச்சராக யாயிா் லபீடும் பொறுப்பேற்றனா்.

சுழற்சி முறையில் ஆட்சிப் பொறுப்பு மாற்றியமைக்கப்படும்போது பிரதமராக யாயிா் லபீட் பொறுப்பேற்பதாக இருந்தது.

எனினும், கூட்டணி அரசில் எதிரெதிா் சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகளால் கூட்டணியில் உள்பூசல் அதிகரித்து வந்தது. இதனால், பென்னட் தலைமையிலான அரசு பெரும்பான்மை பலம் இழந்தது.

இந்தச் சூழலில் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிதாகத் தோ்தல் நடத்த முன்னாள் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சி கடந்த ஜூன் 22 ஆம் தேதி மசோதா தாக்கல் செய்தது. அந்த மசோதா தற்போது நடைபெற்ற வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com