'கிரே' பட்டியலில் தொடரும் பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காததால் நெருக்கடி

பாகிஸ்தானை 'கிரே' பட்டியலிலேயே எஃப்ஏடிஎஃப் தக்க வைத்துள்ளது. மற்ற குறைபாடுகளை விரைந்து களையுமாறு அந்த அமைப்பு பாகிஸ்தானை கேட்டு கொண்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பயங்கரவாத அமைப்புகள், பயங்கரவாதிகள் ஆகியோருக்கு நிதி கிடைப்பதைத் தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை பாரீஸை சோ்ந்த பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பு மேற்கொண்டு வருகிறது. பல நாடுகளில் அந்த அமைப்பு ஆய்வுகளை நடத்தி, அதற்கேற்ப நாடுகளை வகைப்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளை எஃப்ஏடிஎஃப் அமைப்பு கருப்புப் பட்டியலில் வைத்துள்ளது. பாகிஸ்தான், மியான்மா், பிலிப்பின்ஸ், சிரியா, உகாண்டா, யேமன், மோரீஷஸ், கம்போடியா உள்ளிட்ட நாடுகள் ‘கிரே’ பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. 

இந்தப் பட்டியலில் வைக்கப்படும் நாடுகளால் சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளில் இருந்து நிதியுதவியைப் பெற முடியாது.

இந்நிலையில், பாகிஸ்தானை 'கிரே' பட்டியலிலேயே எஃப்ஏடிஎஃப் தக்க வைத்துள்ளது. மற்ற குறைபாடுகளை விரைந்து களையுமாறு அந்த அமைப்பு பாகிஸ்தானை கேட்டு கொண்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

நித மோசடியை களைந்து பயங்கரவாத செயல்களுக்கு நிதி செல்வதை தவிர்க்க தவறியதால் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ‘கிரே’ பட்டியலில் தொடர்ந்துவரும் பாகிஸ்தானிடம், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் செயல் திட்டம் அளிக்கப்பட்டது. இதை, 2019ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், செயல் திட்டத்தை நிறைவேற்றாததன் காரணமாக பாகிஸ்தான் ‘கிரே’ பட்டியலில் தொடர்ந்துவருகிறது. இதுகுறித்து பாகிஸ்தானின் டான் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், "செயல் திட்டத்தில் 34 இலக்குகளில் 32ஐ நிறைவேற்றிவிட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தபோதிலும், அதை ‘கிரே’பட்டியலில் வைக்க வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செயல் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற பாகிஸ்தானை எஃப்ஏடிஎஃப் அமைப்பு ஊக்குவித்துவருகிறது. மிக முக்கிய பயங்கரவாதிகள் மற்றும் ஐநாவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது செயல் திட்டத்தில் ஓர் அம்சமாக உள்ளது. இதை நிறைவேற்ற தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com