அமெரிக்காவில் இதுவரை 1.3 கோடி குழந்தைகள் கரோனாவால் பாதிப்பு

கரோனா நோய்த்தொற்று தொடங்கியதில் இருந்து அமெரிக்காவில் சுமார் 1.3 கோடி குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
அமெரிக்காவில் இதுவரை 1.3 கோடி குழந்தைகள் கரோனாவால் பாதிப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: கரோனா நோய்த்தொற்று தொடங்கியதில் இருந்து அமெரிக்காவில் சுமார் 1.3 கோடி குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (ஏஏபி) மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. 

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவல் 2 ஆண்களுக்கும் மேலாக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அமெரிக்காவில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,32,40,101 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,21,581 ஆகவும், சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 14,23,104 ஆகவும் உள்ளது.    

இந்நிலையில், அமெரிக்காவில் இதுவரை 13 மில்லியன் குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (ஏஏபி) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கரோனா நோய்த்தொற்று பரவல் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவில் இதுவரை சுமார் 1.3 கோடி குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது சோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 1 லட்சத்து 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை மாலை வெளியான அறிக்கையின்படி, 2022 இல் இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள மொத்த கரோனா பாதிப்புகளில் 19 சதவிகிதம் பேர் குழந்தைகள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் கருத்துப்படி, ஏப்ரல் 28 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்ததை விட 60 சதவிகிதம் அதிகமாகும். இது தொடர்ந்து மூன்றாவது வாராமாக குழந்தைகள் தொற்று பாதிப்பு அதிகரிப்பை காட்டுகிறது. 

நோயின் தீவிரத்தை மதிப்பிடுவதற்கு புதிய மாறுபாடுகள் மற்றும் சாத்தியமான நீண்ட கால விளைவுகள் தொடர்பான மற்றும் அதிக வயது சார்ந்த தரவுகளை அவசரமாக சேகரிக்க வேண்டியதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் "குழந்தைகளின் ஆரோக்கியத்தில் தொற்றுநோய்களின் உடனடி விளைவுகள் இருப்பதை அங்கீகரிப்பது முக்கியம், ஆனால் இந்த தலைமுறை குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உடல், மனம் மற்றும் சமூக நல்வாழ்வில் நீண்டகால தாக்கங்களைக் கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டியது மிக முக்கியம்." என்று அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் கூறியுள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com