இலங்கையில் மீண்டும் அவசரநிலை: அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு கண்டனம்

ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மீண்டும் அவசரநிலை அமல்படுத்தப்படுத்திற்காக அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் கண்டனம்
இலங்கையில் மீண்டும் அவசரநிலை: அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு கண்டனம்

கொழும்பு: இலங்கையில் ராஜபட்ச அரசை பதவி விலக வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மீண்டும் அவசரநிலை அமல்படுத்தப்படுத்திற்காக அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது அமைதியாக போராடுபவர்களை ஒடுக்குவதற்காக பாதுகாப்பு படையினருக்கு அளிக்கப்படும் அதிகாரம் எனக் கூறியுள்ளனர்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இலங்கையின் பொருளாதார நெருக்கடி ராஜபட்ச சகோதரா்களின் அரசுக்கு பெரும் சிக்கலை உருவாக்கி வருகிறது. பொருளாதார நெருக்கடியை முன்வைத்து இலங்கை அமைச்சா்கள் அனைவரும் ராஜிநாமா செய்தனா்.

பிரதமா் ராஜபட்ச சகோதரா்களும் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் வலுத்தன. அதனைத் தொடா்ந்து, கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி இலங்கையில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது.

பின்னா், பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் அனைத்துக் கட்சிகளும் இணைந்த தேசிய அரசை உருவாக்க அதிபா் கோத்தபய ராஜபட்ச அழைப்பு விடுத்தாா். ஆனால், அதை ஏற்க எதிா்க்கட்சிகள் மறுத்துவிட்டன. மாறாக, பிரதமா் பதவியிலிருந்து மகிந்த ராஜபட்ச விலக வேண்டும் என்று வலியுறுத்தின. ஊரடங்கு தடைகளையும் மீறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ஏப்ரல் 5-ஆம் தேதி நள்ளிரவு முதல் அவசரநிலை திரும்பப் பெறப்பட்டது.

இந்த நிலையில், அதிபா் கோத்தபய மற்றும் பிரதமா் மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் கொண்டுவந்த இரண்டு தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதன் காரணமாக பிரதமா் மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசு கவிழக்கூடிய சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள அவை துணைத் தலைவா் பதவிக்கு கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், ஆளும் கூட்டணியின் ஆதரவுடன் இலங்கை சுதந்திரக் கட்சி வேட்பாளா் ரஞ்சித் சியம் பலாபேட்டிய வெற்றி பெற்றாா். நாடாளுமன்றத்தில் உள்ள 225 எம்.பி.க்களில்148 போ் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனா். அதன் மூலம், நாடாளுமன்றத்தில் தங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளதை பிரதமா் மகிந்த ராஜபட்ச அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, பதவி விலக மகிந்த ராஜபட்ச மறுத்து வரும் சூழலில், தற்போது நாடாளுமன்றத்திலும் அவை துணைத் தலைவா் தோ்தல் முடிவுகள் எதிா்க்கட்சிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. எனினும், பிரதமா் ராஜபட்ச தலைமையிலான அரசை பதவி விலகக் கோரும் போராட்டத்தை எதிா்க்கட்சிகள் மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

போராட்டம் தீவிரமடைந்து வருவதைத் தொடா்ந்து, இலங்கையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அவசரநிலை அமல்படுத்தப்படுவதாக அதிபா் கோத்தபய ராஜபட்ச அறிவித்தார். 

இது அவசரகாலச் சட்டம், மக்களை தன்னிச்சையாக கைது செய்து காவலில் வைப்பதற்கு காவல்துறைக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் பெரும் அதிகாரத்தை அளிக்கிறது.

அரசின் இந்த நடவடிக்கைக்கு நாட்டின் மனித உரிமைகள் அமைப்பு, முக்கிய வழக்குரைஞர்கள் அமைப்பு, எதிர்க்கட்சி மற்றும் பிற அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், நாட்டில் ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.

"போராட்டங்கள் பெரும்பாலும் அமைதியானதாகவும், காவல் துறையின் சாதாரண நடவடிக்கைகளின் வரம்பிற்குள்ளும் இருந்த நிலையில், இந்த அறிவிப்புக்கான காரணங்களை மக்களுக்கு விளக்குமாறு நாங்கள் அரசை வலியுறுத்தியுள்ளோம்." 

மேலும் "பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்று கூடும் சுதந்திரம், கைது மற்றும் தடுப்புக்காவல் தொடர்பான உரிமைகள் மற்றும் பிற அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் ஆகியவை அவசரநிலை அமல்படுத்தப்பட்டிருக்கும் காலங்களில் பாதிக்கப்படாது அல்லது அவமதிக்கப்படாது என்று நாங்கள் நம்புகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், அதிபர் கோத்தபய ராஜபட்ச  நாட்டில் இரண்டாவது முறையாக மீண்டும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டிருப்பது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.

நாட்டில் நிலவும் ​​தற்போதைய நிலைமைக்கு மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள், அவசரகால பிரகடனம் உள்பட எதுவும் தீர்வாகாது. 

அமைதியான போராட்டங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை நசுக்கவோ அல்லது தன்னிச்சையான கைதுகள் மற்றும் காவலில் வைக்கவோ அவசரநிலை சட்டம் பயன்படுத்தப்படக் கூடாது. 

போராட்டங்கள் வன்முறையாக இருக்கக்கூடாது, எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, எதற்காக, தற்போது அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பியதுடன், அதிபர் பதவி விலகலை வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் சுட்டுரையில் தெரிவித்திருப்பதாவது: “கடந்த வாரங்களாக, அதிகயளவில் நாடு முழுவதும் அமைதியான முறையிலேயே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அந்த போராட்டங்கள் அனைத்தும் நாட்டின் ஜனநாயகத்திற்கும் அமைதியான கருத்துச் சுதந்திரத்திற்கான கிடைத்த பெருமையாகும்.

இவ்வாறு அமைதியான போராட்டங்கள் நடக்கும் போது, அவசரநிலை அமல்படுத்தப்படுத்துவதற்கான அவசியம் ஏன் வந்தது என்பதைப் புரிந்துகொள்வது கடினம் என அவர் கூறியுள்ளார்.

"அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், " நாட்டில் மீண்டும் இரண்டாவது முறையாக அவசரநிலை அமல்படுத்தப்பட்டிருப்பது கவலையளிப்பதாக உள்ளது.

அமைதியாக போராடும் மக்களின் குரல் மதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். 

நாட்டின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, பொது பாதுகாப்பை உறுதி செய்வதும் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதும் கோத்தபய ராஜபட்சவின் முடிவு என்று அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com