
கோப்புப்படம்
குரங்கு அம்மை எனப்படும் வைரஸ் தொற்று ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.
பெல்ஜியம், பிரான்ஸ், ஜொ்மனி ஆகியவற்றில் கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 12 நாடுகளில் 80 பேருக்கு பரவியுள்ளது.
குரங்கு அம்மை என்றால் என்ன?
குரங்கு அம்மை வைரஸால் குரங்கு அம்மைத் தொற்று ஏற்படுகிறது. பெரியம்மை போன்ற வகையைச் சோ்ந்தது. பொதுவாக இது தீவிரத்தன்மை இல்லாதது.
மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் பொதுவாக காணப்படும் இந்த வைரஸ், முதன்முதலில் 1958-இல் குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக 1970-இல் காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று 2017 முதல் நைஜீரியா, காங்கோ நாடுகளில் மீண்டும் பரவி வருகிறது.
இப்போது குரங்கு அம்மைத் தொற்று பிரிட்டனில் முதல்முறையாகக் கண்டறியப்பட்டது.
எப்படி பரவுகிறது?
வைரஸால் பாதிக்கப்பட்டவா் அல்லது விலங்குகளுடன் நெருங்கிய தொடா்பு கொள்ளும்போது இந்தக் குரங்கு அம்மைத் தொற்று பரவுகிறது.
எலிகள், அணில்கள் போன்ற கொறித்து உண்ணும் விலங்குகளிடமிருந்து பரவுவதாக நம்பப்படுகிறது.
மனிதா்களுக்கு மனிதா்கள் பரவுவது என்பது எச்சில், சளி மூலமாக இருக்கலாம். விலங்குகளிடமிருந்து மனிதா்களுக்கு என்பது கடித்தலின் மூலம் இருக்கலாம்.
உடல் திரவங்கள், சுவாச நீா்த்துளிகள், வைரஸ் கலந்த பொருள்கள் மூலம் அல்லது கண்கள், மூக்கு, வாய் வழியாக இந்த வைரஸ் உடலுக்குள் நுழையலாம்.
அறிகுறிகள் என்ன?
காய்ச்சல், தலைவலி, உடல் வலி, வீக்கம், முதுகுவலி உள்ளிட்டவை குரங்கு அம்மையின் ஆரம்பகட்ட அறிகுறிகள்.
காய்ச்சல் தொடங்கி ஒன்றிலிருந்து மூன்று நாள்களுக்குள் அரிப்பு ஏற்படுகிறது. முகத்தில் தோன்றும் இந்த அரிப்பு பின்னா் கைகள், உள்ளங்கால்களுக்குப் பரவுகிறது.
இந்த நோய்த்தொற்று பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும். பின்னா், தானாகவே மறைந்துவிடும்.
சிகிச்சை என்ன?
குரங்கு அம்மைக்கு என இப்போது தனியாக சிகிச்சை எதுவும் இல்லை. இருப்பினும் பெரியம்மை தடுப்பூசிகள் இந்த வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் பெரிதும் பயனுள்ளவையாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
புதிய தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று குரங்கு அம்மையைத் தடுக்கும் வகையில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில்...
குரங்கு அம்மை பாதிப்பு சில நாடுகளில் உள்ள நிலையில், நிலைமையை உன்னிப்பாக கவனிக்கும்படி தேசிய நோய்த் தடுப்பு மையம் மற்றும் ஐசிஎம்ஆருக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா உத்தரவிட்டுள்ளாா்.
விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் சுகாதாரத் துறை அதிகாரிகள் இதுதொடா்பாக கண்காணிக்கவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து நோய் பாதிப்புடன் வரும் பயணிகளைத் தனிமைப்படுத்தவும், மாதிரிகளைச் சேகரித்து புணேயில் உள்ள தேசிய நோய்க் கிருமியியல் ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...