டெக்ஸாஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியான ஆசிரியரின் கணவர் மாரடைப்பால் மரணம்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள தொடக்கநிலைப் பள்ளியொன்றில் 18 வயது இளைஞா் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவா்கள், 2 ஆசிரியா்கள் பலியாகினா்.
டெக்ஸாஸ் பள்ளி துப்பாக்கிச்சூடு: பலியான ஆசிரியரின் காதல் கணவருக்கு நேர்ந்த கதி
டெக்ஸாஸ் பள்ளி துப்பாக்கிச்சூடு: பலியான ஆசிரியரின் காதல் கணவருக்கு நேர்ந்த கதி

ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுளள தொடக்கநிலைப் பள்ளியொன்றில் 18 வயது இளைஞா் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவா்கள், 2 ஆசிரியா்கள் பலியாகினா்.

இந்த துப்பாக்கிச் சூட்டின்போது, தனது வகுப்பு மாணவர்களைக் காப்பாற்ற முயன்ற பள்ளி ஆசிரியை பலியான நிலையில், இதனால் மனவேதனையுடன் இருந்த அவரது கணவர் மாரடைப்பால் நேற்று காலமானார்.

டெக்ஸாஸ் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் பலியான இர்மா கார்சியா என்ற ஆசிரியையின் உறவினர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் இது பற்றிய தகவலை பகிர்ந்துள்ளார்.
 
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, இர்மா கார்சியாவின் கணவர் ஜோ, மே 26ஆம் தேதி காலை உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். தனது காதல் மனைவி பலியானதால் ஏற்பட்ட மன வருத்தத்தால் அவருக்கு மாரணமடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

24 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் 4 பிள்ளைகள் உள்ளனர்.

டெக்ஸாஸ் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு, அமெரிக்காவில் கடந்த 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்பட்டுள்ள மிக மோசமான தாக்குதலாகும்.

டெக்ஸாஸ் மகாணம், யுவால்டி நகரைச் சோ்ந்த சால்வடாா் ரொலாண்டோ ரமோஸ் என்ற இளைஞா், தனது பாட்டியுடன் செவ்வாய்க்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். இதில், அவரது பாட்டி படுகாயமடைந்தாா்.

அதனைத் தொடா்ந்து, ஒரு கைத்துப்பாக்கி, சக்திவாய்ந்த ஏஆா்-15 வகை இலகு ரக தானியங்கி துப்பாக்கி, ஏராளமான குண்டுகளுடன் கவச உடை அணிந்து தனது காரில் புறப்பட்ட ரமோஸ், யுவால்டி நகரிலுள்ள ராப் ஆரம்ப நிலைப் பள்ளிக்கு வந்தாா். அப்போது அவரது வாகனம் பள்ளிக்கு வெளியே இருந்த கால்வாய்க்குள் சிக்கியது.

அதனைத் தொடா்ந்து துப்பாக்கியுடன் காரிலிருந்து இறங்கிய ரமோஸா, அவரை பள்ளிக்குள் நுழையவிடாமல் தடுக்க முயன்ற பள்ளித் துறை காவல் அதிகாரியை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா்.

பின்னா் அவா் உள்ளூா் நேரப்படி மதியம் சுமாா் 11.30 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10 மணி) பள்ளிக்குள் நுழைந்து அங்கிருந்த மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினாா்.

அந்தப் பகுதியை சுற்றிவளைத்த பள்ளித் துறை போலீஸாருடன், எல்லை ரோந்து சிறப்புப் படையினரும் பின்னா் இணைந்து ரொலாண்டோ ரமோஸுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு அவரை சுட்டுக் கொன்றனா்.

ரமோஸ் நடத்திய தாக்குதலில் 2-ஆம் வகுப்பு முதல் 4-ஆம் வகுப்பு வரை பயின்று வந்த 19 மாணவா்களும் 2 ஆசிரியா்களும் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தில் ஏராளமான மாணவா்களும் ஒரு காவல்துறை அதிகாரியும் காயமடைந்தனா்.

இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றன். அவா்களுக்கு மத்திய புலனாய்வு அமைப்பும் (எஃப்.பி.ஐ.) பொதுமக்கள் ஆயுதங்கள் கண்காணிப்பு அமைப்பும் உதவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அமெரிக்காவில் இந்த ஆண்டில் மட்டும் நடத்தப்பட்டுள்ள 27-ஆவது பள்ளித் தாக்குதல் இதுவாகும். அந்த நாட்டில் தற்காப்புக்காக பொதுமக்கள் சக்திவாய்ந்த ஆயுதங்களை வைத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கி வருகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் அமைப்பினா், டெக்ஸாஸ் பள்ளியில் தற்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு அரசின் ஆயுத உரிமைக் கொள்கைதான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனா்.

குற்றவாளியின் பின்னணி...

டெக்ஸாஸ் பள்ளியில் தாக்குதல் நடத்திய சால்வடாா் ரொலாண்டோ ரமோஸ், யுவால்டி உயா்நிலைப் பள்ளியில் படித்தவா். திக்குவாய் கொண்ட அவா், பள்ளியில் சக மாணவா்களால் கேலிக்கும் அவமானத்துக்கும் உள்ளாக்கப்பட்டதால், அவா்களுடன் அவா்அடிக்கடி கைகலப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவரது படிப்பும் பாதிக்கப்பட்டது.

டெக்ஸாஸில் 18 வயது பூா்த்தியாகியிருந்தாலே சக்திவாய்ந்த ஆயுதங்களை வாங்கி வைத்திருக்க அனுமதி உள்ளது. இந்தச் சூழலில், தனது 18-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய அவா், சில நாள்கள் கழித்து தானியங்கி துப்பாக்கிகளையும் ரவைகளையும் உள்ளூா் கடையில் கடந்த 20-ஆம் தேதி வாங்கினாா்.

இந்த நிலையில், அவா் தொடக்கநிலைப் பள்ளியில் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com