கலிஃபோர்னியாவில் கடத்தப்பட்ட குழந்தை உள்பட 4 இந்தியர்கள் படுகொலை

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடத்தப்பட்ட 8 மாதக் பெண் குழந்தை உள்பட 4 இந்தியர்களும், சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கலிஃபோர்னியாவில் கடத்தப்பட்ட குழந்தை உள்பட 4 இந்தியர்கள் படுகொலை


புது தில்லி: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடத்தப்பட்ட 8 மாதக் பெண் குழந்தை உள்பட 4 இந்தியர்களும், சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நான்கு பேரும் கடத்தப்பட்டதாக தகவல் கிடைக்கப்பெற்று காவல்துறையினர் தேடி வந்த நிலையில், மறுநாள் அவர்கள் கடத்தப்பட்ட பகுதிக்கு அருகே நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது கலிஃபோர்னியாவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எட்டு மாத பெண் குழந்தை அரூஹி தேரி, அவரது பெற்றோர் ஜஸ்லீன் கௌர் (27), ஜஸ்தீப் சிங் (36), உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் திங்கள்கிழமையன்று வடக்கு கலிஃபோர்னியாவின் மெர்சிட் கௌண்டியில் உள்ள ஒரு நிறுவனத்திலிருந்து கடத்தப்பட்டனர்.

இவர்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், இண்டியானா சாலை மற்றும் ஹட்சின்சன் சாலைக்கு அருகே நால்வரின் உடல்களை புதன்கிழமை மாலை பார்த்த தொழிலாளர்கள் சிலர், உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஷெரிஃப் வார்ங்கே கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக தனக்கு ஏற்பட்டுள்ள வேதனை குறித்து சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அவர்கள் கடத்தப்பட்ட இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில், ஜஸ்தீப் மற்றும் அமன்தீப் ஆகியோர் கைகள் கட்டப்பட்ட நிலையில் வெளியே அழைத்து வரப்படுகிறார்கள். சில நிமிடங்கள் கழித்து, குழந்தையுடன் அவரது தாயும் வெளியே அழைத்து வரப்பட்டு, ஒரு டிரக்கில் ஏற்றப்படுகிறார்கள்.

சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து குற்றவாளியை அடையாளம் கண்ட காவல்துறையினர், 48 வயதாகும் ஜீசஸ் மேனுவல் சல்காடோவைக் கைது செய்ய முயன்ற போது, அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததால், ஆபத்தான நிலையில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சல்காடோ குறித்து ஷெரிஃப் வார்ங்கே கூறுகையில், நரகத்தில் நிச்சயம் அவருக்கு ஒரு சிறப்பான இடம் தயாராக இருக்கும் என்று கூறினார்.

இது குறித்து மெர்சிட் கௌண்டி காவல்துறையினர் கூறுகையில், சல்காடோவின் குடும்பத்தினர் காவல்துறையை தொடர்பு கொண்டு, அவர் இந்தியர்களைக் கொன்றதை ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்ததாகக் கூறியுள்ளது.

ஜஸ்தீப் பெற்றோர் டாக்டர் ரன்தீன் சிங் மற்றும் கிர்பால் கௌர் ஆகியோர் பஞ்சாப் மாநிலம் ஹோஷியாபூர் பகுதியில் உள்ள ஹர்ஸி பிந்த் கிராமத்தில் வசித்து வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com