
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கிலிருந்து பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், அவரது மகன் ஹாம்ஸா ஷாபாஸ் ஆகியோரை அந்த நாட்டு தேசிய புலனாய்வு அமைப்பின் (எஃப்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை விடுவித்தது.
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை மூலம் ரூ.1,600 கோடி திரட்டியதாக பஞ்சாப் மாகாண முன்னாள் முதல்வா்களான ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் ஹாம்ஸா ஷாபாஸ் மீது எஃப்ஐஏ கடந்த 2020-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.
இந்த நிலையில், இருவா் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கிலிருந்து அவா்களை விடுவிப்பதாக சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது. அரசுத் தரப்பிலிருந்து சாட்சியங்கள் யாரும் அழைத்துவரப்படாத நிலையில் இந்தத் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சமரசம் செய்துகொள்ளப்பட்டதால் இருவரும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டதாக முன்னாள் பிரதமா் இம்ரான் கான் விமா்சித்துள்ளாா்.