
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு உதவ முன்வந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநருக்கு நோபல் வெற்றியாளர் மலாலா நன்றி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக கடும்வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக இதுவரை 1100க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்களது குடியிருப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். பாகிஸ்தானில் மூன்றில் ஒரு பங்கு நிலப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. பாகிஸ்தானின் இந்த பேரிடருக்கு உலகின் பல்வேறு நாடுகளும் உதவ முன்வந்துள்ளன.
இதையும் படிக்க | வெள்ள பாதிப்பு: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதியுதவி
இந்நிலையில் பாகிஸ்தானின் இயற்கை பேரிடருக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய தயாராக உள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் டிம் குக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில், பாகிஸ்தானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்பட்ட வெள்ளம் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.அன்புக்குரியவர்களை இழந்தவர்கள், இடம்பெயர்ந்த பல குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்களது எண்ணங்கள் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை ஆப்பிள் நிறுவனம் மேற்கொள்ளும்
எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | அமெரிக்கப் படைகள் வெளியேற்றத்தின் ஓராண்டைக் கொண்டாடிய தலிபான்கள்
டிம் குக்கின் இந்த அறிவிப்புக்கு நோபல் வெற்றியாளரும், பெண் கல்வி ஆர்வலருமான மலாலா நன்றி தெரிவித்துள்ளார்.