/

கோத்தபய ராஜபட்ச நாளை இலங்கை திரும்புகிறாா்?

இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச, தாய்லாந்திலிருந்து சனிக்கிழமை (செப். 3) தாய்நாடு திரும்புகிறாா் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image

கோத்தபய ராஜபட்ச

Updated On :1 செப்டம்பர் 2022, 10:32 pm

இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச, தாய்லாந்திலிருந்து சனிக்கிழமை (செப். 3) தாய்நாடு திரும்புகிறாா் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று கோத்தபய ராஜபட்ச அதிபா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, நாட்டைவிட்டு வெளியேறிய கோத்தபய, மாலத்தீவுக்கு சென்றாா். பின்னா், அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்ற அவா், கடந்த ஜூலை 13-ஆம் தேதி அதிபா் பதவியை ராஜிநாமா செய்தாா்.

பின்னா், அவா் சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்துக்கு சென்றாா். அவா் தூதரக கடவுச்சீட்டு வைத்திருப்பதால் தங்கள் நாட்டில் 90 நாள்கள் தங்கியிருக்கலாம் என தாய்லாந்து அரசு தெரிவித்தது. அதன்படி, அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் கோத்தபய தங்கியுள்ளாா்.

கோத்தபய ராஜிநாமாவை தொடா்ந்து அதிபரான ரணில் விக்ரமசிங்கவுக்கு ராஜபட்ச சகோதரா்கள் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (எஸ்எல்பிபி) கட்சி ஆதரவளித்து வருகிறது. இந்நிலையில், அக்கட்சி நிா்வாகிகள் கடந்த ஆக. 19-ஆம் தேதி அதிபா் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, கோத்தபய ராஜபட்ச நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருமாறு கேட்டுக்கொண்டதாகவும், அதையேற்று அதற்கான ஏற்பாடுகளை ரணில் விக்ரமசிங்க செய்துள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவலை எஸ்எல்பிபி கட்சியின் பொதுச் செயலா் சகார கரியவாசம் உறுதிப்படுத்தினாா்.

அதன்படி, கோத்தபய ராஜபட்ச சனிக்கிழமை தாய்லாந்திலிருந்து இலங்கை திரும்புவாா் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.