ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வோர் யார்? யார்?

மறைந்த பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளப் போகிறவர்கள் யார், யார் பற்றிய விவரம்...
ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வோர் யார்? யார்?
Published on
Updated on
2 min read

மறைந்த பிரிட்டிஷ் எலிசபெத்  ராணியின் இறுதிச் சடங்கு லண்டனில் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் நூற்றுக்கணக்கில் உலகத் தலைவர்கள், அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற அரசு, அரசியல் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

தற்போது இறுதிச் சடங்கில் கலந்துகொள்வோர் பட்டியல் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

காமன்வெல்த் அமைப்பில் இருந்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனேசி, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் மற்றும் ஜமைக்கா கவர்னர் ஜெனரல் சர் பேட்ரிக் ஆலன் ஆகியோர் கலந்துகொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் சார்பாக அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜில் பைடன் ஆகியோர் கலந்துகொள்வார்கள். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸும் கலந்து கொள்வார்.

பிரிட்டன் அரசி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் இந்தியாவின் சார்பில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க உள்ளார்.

பிரான்சின் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மனியின் அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர், இத்தாலி அதிபர்  செர்ஜியோ மட்டரெல்லா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் அதிபர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோரும் பங்கேற்பார்கள்.

அரச விருந்தினர்களில் மொனாக்கோவின் இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் மற்றும் இளவரசி சார்லீன், ஸ்பெயின் மன்னர் ஃபிலிப் மற்றும் ராணி லெடிசியா, பெல்ஜியத்தின் மன்னர் பிலிப் மற்றும் ராணி மாதில்டே, ஸ்வீடன் மன்னர் கார்ல் பதினாறாம் குஸ்டாஃப் மற்றும் ராணி சில்வியா, ஜப்பான் பேரரசர் நருஹிட்டோ, நெதர்லாந்தின் மன்னர் வில்லெம் - அலெக்சாண்டர் மற்றும்  ராணி மாக்சிமா ஆகியோரும் பங்கேற்பார்கள்.

மன்னர் பிலிப்பின் பெற்றோர், முன்னாள் மன்னர் ஜுவான் கார்லோஸ் மற்றும் ராணி சோபியா, நார்வேயின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட் மற்றும் டென்மார்க்கின் ராணி மார்கரேட் ஆகியோரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.போலந்தின் அதிபர் ஆண்ட்ரேஜ் டுடா, ஆஸ்திரியாவின் அதிபர் அலெக்சாண்டர் வான் டெர் பெல்லன், லிதுவேனியாவின் அதிபர் கிடானாஸ் நௌசேடா, துருக்கியின் அதிபர் தையிப் எர்டோகன், இஸ்ரேலின் அதிபர் ஐசக் ஹெர்ஸாக், தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசா, இலங்கையின் அதிபர் ரணில் விக்கிரமசிங்க, தென் கொரியாவின் அதிபர்  யூன் சுக்-யோல் மற்றும் பிரேசில் அதிபர் ஜைர் போல்சனாரோ உள்ளிட்டோரும் இடம்பெறுகிறார்கள்.

ரஷியாவுடனான தற்போதைய போர் காரணமாக உக்ரைனின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு ஆட்சிக்கவிழ்ப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மியான்மர் நாட்டுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. 

வெஸ்ட்மின்ஸ்டரில் இறுதிச் சடங்குகளைத் தொடர்ந்து, அடுத்த திங்கள்கிழமை அரசு மரியாதையுடன், வின்ட்சர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அவருடைய பெற்றோர் மன்னர் ஆறாம் ஜார்ஜ் மற்றும் முதலாம் எலிசபெத், சகோதரி இளவரசி மார்கரெட் மற்றும் கணவர் இளவரசர் பிலிப் ஆகியோர் கல்லறைகளுக்கு அருகே ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com