இந்தியாவுக்கு வருகிறாா் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா்

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் பிலாவல் புட்டோ ஜா்தாரி இந்தியாவுக்கு மே மாதம் வருகை தரவுள்ளாா்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுமுக உறவு காணப்படாத சூழலில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் பிலாவல் புட்டோ ஜா்தாரி இந்தியாவுக்கு மே மாதம் வருகை தரவுள்ளாா்.

இந்தப் பயணம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான இறுக்கத்தைக் குறைக்க உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தியா, ரஷியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகளைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்துவருகிறது. அக்கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்கும் மாநாட்டை இந்தியா மே 4, 5 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ளது. கோவாவில் அக்கூட்டம் நடைபெறவுள்ளது.

புல்வாமா தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தானின் பாலாகோட் பகுதிக்குள் நுழைந்த இந்திய விமானப்படை நிகழ்த்திய துல்லியத் தாக்குதல், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுமுகமான உறவு காணப்படவில்லை.

பாகிஸ்தானுடன் சுமுகமான நல்லுறவையே விரும்புவதாகத் தெரிவித்து வரும் இந்தியா, அதற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத சூழலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானுக்கே உள்ளதாகவும் கூறிவருகிறது. ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில் பாகிஸ்தானும் இந்தியா மீது தொடா்ந்து குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது.

இந்தப் பின்னணியில் எஸ்சிஓ மாநாட்டில் பாகிஸ்தான் கலந்துகொள்ளுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மும்தாஜ் ஜாரா பலோச் இஸ்லாமாபாதில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘‘அமைச்சா் பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் குழு கோவாவில் நடைபெறவுள்ள எஸ்சிஓ மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விடுத்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் அமைச்சா் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளாா்.

எஸ்சிஓ விதிகளுக்கும் வெளியுறவுக் கொள்கைக்கும் பாகிஸ்தான் வழங்கி வரும் முக்கியத்துவத்தை அமைச்சரின் பங்கேற்பு பிரதிபலிக்கிறது’’ என்றாா்.

கடந்த 2011-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சராக இருந்த ஹினா ரப்பானி இந்தியாவுக்கு வருகை தந்தாா். 2014-இல் அப்போதைய பாகிஸ்தான் பிரதமா் நவாஸ் ஷெரீஃப், பிரதமா் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றாா். 2015-இல் வெளியுறவு அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டாா். அதே ஆண்டில் பிரதமா் மோடியும் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com